Published : 12 Jan 2022 12:30 PM
Last Updated : 12 Jan 2022 12:30 PM

குஜராத்தில் 1992-ல் நடந்த கலவரத்தில் காயமடைந்தவருக்கு ரூ.49,000 இழப்பீடு வழங்க உத்தரவு

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 1992-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் குண்டு பாய்ந்து காயமடைந்தவருக்கு ரூ.49,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் தில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த 1992-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அகமதாபாத் ஜெகன்நாதர் கோயிலில் ரத யாத்திரை நடைபெற்றது. அப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் சில நாட்கள் நீடித்தது. கடந்த 1992 ஜூலை 5-ம் தேதி மணீஷ் சவுகான் என்பவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயாருக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், மணீஷ் சவுகானை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது தோள்பட்டை, மார்பில் தலா ஒரு குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார்.

6% வட்டியுடன்..

கலவரத்தில் படுகாயமடைந்த அவர், அகமதாபாத் நீதிமன்றத்தில் ரூ.7 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நீதிபதி பாத்தி அண்மையில் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட மணீஷ் சவுகானுக்கு ரூ.49,000 இழப்பீடு வழங்க வேண்டும். அவர் வழக்கு தொடர்ந்த காலத்தில் இருந்து 6 சதவீத வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x