Published : 12 Jan 2022 06:39 AM
Last Updated : 12 Jan 2022 06:39 AM

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்: நாடு முழுவதும் ஒரே நாளில் 1.68 லட்சம் பேர் தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில்உள்ள தனியார் அலுவலகங்களை முழுமையாக மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் ஒரேநாளில் 1.68 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா மற்றும்ஒமைக்ரான் வைரஸ் மிகவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்ஒருபகுதியாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் டெல்லியில் உள்ள தனியார் அலுவலகங்களை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கெனவே டெல்லியில் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அலுவலகங்களை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆர்பிஐ அலுவலகங்கள், கூரியர் அலுவலகங்கள், மருந்தகம், தொலைத்தொடர்பு சேவைஅலுவலகங்கள் போன்றவை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பர் 27-ம் தேதி நிலவரப்படி நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 6,358 ஆக இருந்தது. அதன்பிறகு தினசரி பாதிப்பு அதிவேகத்தில் உயர்ந்துநேற்று முன்தினம் 1 லட்சத்து 79,723 ஆக இருந்தது. இந்நிலையில் 13 நாட்களுக்கு பிறகு நேற்றுகரோனா பாதிப்பு, முந்தைய நாளைவிட சற்றே குறைந்து 1 லட்சத்து 68,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 33,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 19,286, டெல்லியில் 19,166, தமிழகத்தில் 13,990பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 277 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.84 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 21,446 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x