Published : 10 Jan 2022 01:57 PM
Last Updated : 10 Jan 2022 01:57 PM

272 கோடி ரூபாய் வருவாயும்; பறிபோன 900 உயிர்களும் -ஒரு நெடுஞ்சாலையின் ரிப்போர்ட்

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் தொடர்பாக விரிவாகப் பேசியிருந்தார். "பெரும்பாலான மரங்களை வெட்டி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் வேகத்தைப் போலவே விபத்துகளையும் வெகுவாக ஏற்படுத்துகின்றன. நல்ல தரமான சாலைகளும் விபத்துகளுக்கு முக்கியமான காரணியாக அமைகின்றன. ஏன் சாலைகளை ஒரே நேர்க்கோட்டில் அமைக்க வேண்டும்.

நேரான நெடுஞ்சாலைகளில்தான் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே சாலைகளை ஜிக் - ஜாக் பாணியில் வளைவுகள் நிறைந்ததாப் போடுங்கள். அப்போதுதான் குறைவான வாகன ஓட்டிகள் செல்வார்கள். வளைவுகள் நிறைந்த சாலைகள் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் மற்றும் உயிர் இழப்புகளைத் தடுக்கும்" என்று விபத்தைக் குறைக்க நீதிபதி எஸ்.ஏ.பாப்டே யோசனை தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சில தரவுகளை வெளியிட்டார். "இந்தியாவில் கரோனா தொற்றுநோயைவிட சாலை விபத்துகளே கவலையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன. இந்திய சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் சராசரியாக தினமும் 415 பேர் உயிரிழக்கின்றனர். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகம். உயிர் பாதிப்புகள் மட்டுமின்றி, தொழில்துறையில் உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவீதம் இந்த மாதிரியான விபத்துகளால் இழப்பு ஏற்படுகிறது" என்று கவலை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையின் மூன்றாண்டு தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தரவுகள் இந்திய நெடுஞ்சாலைகளின் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாபூர் மற்றும் மொராதாபாத் இடையே 35 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான விவரங்களை நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமித் குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். ஆர்டிஐயில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த பதிலில், "ஹாபூர் மற்றும் மொராதாபாத் இடையே 35 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை பெரும்பாலும் நேரான சாலைகளாக உள்ளன.

2017 முதல் 2021 வரை இந்த 35 கி.மீ. தூரச் சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 900 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2018-19இல் 136 பேரும், 2019-20இல் 184 பேரும், 2020-2021 நவம்பர் வரை 564 பேரும் இறந்துள்ளனர். இதேபோல் 2017 முதல் 2021 வரை இந்தச் சாலை ரூ.272 கோடி வருவாய் ஈட்டியுள்ளது" என்று அந்த ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் குப்தா கடந்த 10 ஆண்டுகளுக்கான தரவுகளை ஆர்டிஐ மூலமாக வினவிய நிலையில் மூன்றாண்டு தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதுடன், 2017-18 ஆம் ஆண்டுக்கு முந்தையை எந்தப் பதிவும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதற்கு பதில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களுக்குப் பேசியுள்ள அமித் குப்தா, "இந்தியாவின் ஒரு சாலையின் நிலை மட்டுமே இது. இந்தச் சாலை தொடர்பாகவும் நான் கேட்ட நிறைய தகவல்கள் சொல்லப்படவில்லை. இங்குள்ள டோல் பிளாசாவின் மூன்றாண்டு வருவாய் மட்டுமே ரூ.272 கோடி. 2041 வரை இங்குள்ள டோல் பிளாசாவில் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு ஆர்டிஐ தகவல் இந்திய நெடுஞ்சாலைகளின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது. சாலை விபத்துகளைக் குறைக்க, நெடுஞ்சாலைகளை மேம்படுத்த இனியேனும் இந்திய அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x