Published : 08 Jan 2022 06:26 AM
Last Updated : 08 Jan 2022 06:26 AM

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 150 கோடி டோஸ்கள் என்று வரலாற்று சிறப்பு மிகுந்த மைல் கல்லை இந்தியா எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெருமிதம் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (சிஎன்சிஐ) 2-வது வளாகம் சுமார் ரூ.530 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயி லாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்தத் தொடங்குவதன் மூலம் நாம் 2022-ம் ஆண்டை தொடங்கியுள்ளோம். வெறும் 5 நாட்களில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 150 கோடி டோஸ்கள் என்று வரலாற்று சிறப்பு மிகுந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது ஒரு பெரிய எண் ஆகும். உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்கு இது ஆச்சரியம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது 130 கோடி இந்திய மக்களின் திறனின் சின்னமாகும். தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பின் சின்னம் ஆகும்.

இந்தியாவில் தயாரிப்பு

பரிசோதனை முதல் தடுப்பூசிவரை இந்தியாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பானது, கரோனாவுக்கு எதிரான போரில்உலகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் அயராது திட்டமிட்டு வருகிறோம்.

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 11 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி மாநிலத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

1500-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் மற்றும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ஆக்சிஜன்சிலிண்டர்கள் மேற்கு வங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. 49 புதிய ஆக்சிஜன் ஆலைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x