Published : 25 Jun 2014 07:00 am

Updated : 25 Jun 2014 11:03 am

 

Published : 25 Jun 2014 07:00 AM
Last Updated : 25 Jun 2014 11:03 AM

டைட்டில் போட்டாச்சு!

பெரும்பாலும் திரைப்படங்களின் டைட்டில்களே அத்திரைப்படங்களின் உள்ளடக்கத்தைச் சொல்லிவிடும். காமெடியா, திரில்லரா, சஸ்பென்ஸா, ரொமாண்டிக்கா என்று பார்வையாளர்களைத் தயார்ப்படுத்துவதற்கு, டைட்டில் காட்சிகள் அமைக்கப்படும் தன்மைக்குப் பிரதான பங்குண்டு. டைட்டில் கார்டுகளின்போதே அதன் பின்னணியில் காட்சிகளைத் துவக்கிச் செல்லும் அவசரக் குடுக்கைகளான இயக்குநர்கள் உண்டு. காட்சியைக் கவனிப்பதா, தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களைக் கவனிப்பதா என்று குழப்பமாக இருக்கும். சுமார் இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை உருவாக்கப் பெருமளவு உழைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் இரண்டரை விநாடிகளுக்கு மேல்கூட இருக்காது எனும்போது அதையும் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் உழைப்புக்குச் செய்யும் அநியாயம்.

பழைய காலத் திரைப்படங்களில் டைட்டிலில் இளையராஜா பாடினால் அந்தத் திரைப்படம் ஹிட் என்று எப்படியோ ஒரு ராசி உருவாகி, அதனாலேயே திரைப்படம் துவங்கும்போதே ராஜாவின் குரலைக் கேட்கும் அதிர்ஷ்டத்தை நாம் அனுபவித்தோம். ஒரு திரைப்படம் காண்பதென்பதே மிகவும் அபூர்வமாக இருந்த நாட்கள் அவை. திரையரங்கம் செல்வதற்கான திட்டங்களே பெரும் மகிழ்ச்சியைத் தரும். இதோ ஒரு சிறந்த வெகுஜன திரைப்படத்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியை, பரவசத்தை ராஜாவின் குரல் இன்னமும் அதிகமாக உணர வைக்கும். பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர் வரும்போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பதுபோல இசை உயர்ந்துகொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும். காமெடிப் படங்கள் என்றால், முகத்தில் மாத்திரம் நடிகர்களின் படங்களைக் கொண்ட கேலிச் சித்திரங்கள் அதிவிரைவில் இடதும் வலதுமாக நகரும். பிறகு வந்த ஆக்ஷன் பழிவாங்கல் திரைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு, கையில் துப்பாக்கி வைத்திருக்கும் மனிதர்கள் நெகட்டிவ் எஃபெக்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும்போதே பரவசமாக இருக்கும்.

இதற்கு மாறாக விருது வாங்குவதற்கென்றே எடுக்கப்படும் திரைப்படங்களின் டைட்டில்கள் அதற்கான சாவகாசத்துடனும் அழகியல் உணர்வுகளுடனும் துவங்கும்போதே ‘ஆஹா.. மிகச் சிறந்த திரைப்படத்தைப் பார்க்கப்போகிறோம்' என்று தோன்றும். அந்த உணர்வு, படம் முடியும்போது மிச்சமிருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

அப்படித்தான், சமீபத்தில் குறியீட்டுக் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குநரின் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். கருப்பு நிறப் பின்னணியில் மெலிதான ஸெலோவின் இசையுடன் பெயர்கள் தோன்றி சில நீண்ட விநாடிகள் கழித்துக் கொட்டாவியான இடைவெளியுடன் அடுத்தடுத்த பெயர்கள் வந்துகொண்டிருந்தன. இரண்டுக்கும் இடையில் திரை இருளாகவே இருக்கும். அத்திரைப்படத்தின் முக்கியமான பாத்திரங்கள் பார்வையற்றவர்கள் என்பதை முன்பே அறிந்திருந்ததால் அந்த பாணி டைட்டில் அதற்குப் பொருத்தமாகவே இருந்ததை உணர்ந்தேன். இயக்குநரின் பெயர் வந்த பிறகும் சில விநாடிகளுக்குத் திரை இருளாகவே இருந்தது.

விநாடிகள் நிமிடங்களுக்கு நகர்ந்தன. அப்போதும் திரை இருளாகவே இருந்தது. ‘இதோ, பார்வையற்ற நபர் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து அறையிலிருந்த விளக்கைப் போடப்போகிறார்' என்கிற மாதிரியான காட்சி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பார்வையற்ற நபர்களின் உலகத்தின் இருண்மையை, தனிமையை இயக்குநர் நமக்கு உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது என்ற எண்ணம் மனதில் சுழன்றது.

சில நிமிடங்கள் கழிந்தும்கூடத் திரை இருளாகவே இருந்தது. ‘இது என்னடா.. ஓவர் குறியீடாக இருக்கிறதே' என்று எழுந்து சென்று பார்த்தேன். மின்சாரம் நின்றுபோய் சில நிமிடங்கள் ஆகியிருந்தன.

http://pitchaipathiram.blogspot.in/2014/05/blog-post.html

திரைப்படங்கள்டைட்டில்கள்காமெடிதிரில்லர்சஸ்பென்ஸ்ரொமாண்டிக்

You May Like

More From This Category

More From this Author