Last Updated : 04 Jan, 2022 10:56 AM

 

Published : 04 Jan 2022 10:56 AM
Last Updated : 04 Jan 2022 10:56 AM

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று: சூப்பர் ஸ்பிரெட்டர் என பாஜக கிண்டல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்


புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை கிண்டல் செய்த பாஜக, சூப்பர் ஸ்பிரெட்டர் என்று விமர்சித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்ேவறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் புதிதாக 4,099 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 10,986 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ எனக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டேராடூன் நகரில் நேற்று நடந்த நவ் பரிவர்த்தன் யாத்ராவில் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று பங்கேற்றுப் பேசினார். டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்திலும் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்பதாக இருந்தது. கரோனா தொற்றால் கேஜ்ரிவால் பாதிக்கப்பட்டதால் காணொலி மூலமே கூட்டம் நடக்கும்.

அரவிந்த் கேஜ்ரிவால் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதை பாஜக கிண்டல் செய்துள்ளது. பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் சூப்பர் ஸ்பிரெட்டராக மாறிவிட்டார். தேர்தல்நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று கேஜ்ரிவால் கரோனாவை பரப்பியுள்ளார். பாட்டியாலா, லக்னோ, கோவாவுக்கு சென்று கரோனாவை நீங்கள் பரப்பியதற்கு யார் பொறுப்பேற்பது. உண்மையில் நீங்கள்தான் சூப்பர் ஸ்பெரெட்டர்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x