Published : 29 Dec 2021 09:59 PM
Last Updated : 29 Dec 2021 09:59 PM

விவசாயிகளுக்கான நிதியுதவி: ஜன.1 முதல் 10-வது தவணை வழங்கப்படுகிறது

புதுடெல்லி: விவசாயிகளுக்கான நிதியுதவி 10-வது தவணை ஜன.1 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், "அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார்.

ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும்.
பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது.

இது 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது.

இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் கவுரவத் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், சுமார் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகை பங்கு மானியமாக விடுவிப்பார். இதன் மூலம் 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் விவசாய உற்பத்தி அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x