Published : 13 Mar 2016 11:56 AM
Last Updated : 13 Mar 2016 11:56 AM

ஷீனா போரா கொலை வழக்கு: நீதிமன்ற செலவுக்காக வீட்டை விற்க பீட்டர் முகர்ஜி முடிவு

ஷீனா போரா கொலை வழக்கில் கைதான ஸ்டார் இந்தியா ‘டிவி’யின் முன்னாள் சிஇஓவான பீட்டர் முகர்ஜி, வழக்கு செலவுக்காக சொந்த வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையின் ராய்காட் வனப்பகுதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில், அவரது தாயார் இந்திராணி முகர்ஜி முக்கிய குற்ற வாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது 3வது கணவரும், ஸ்டார் இந்தியா ‘டிவி’யின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜி மீதும் இந்த கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இருந்து விடுதலையாவதற்காக மும்பை யின் பிரபலமான வழக்கறிஞரை பீட்டர் முகர்ஜி தனது சார்பில் நியமித்துள்ளார். இவர் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை வழக்குக்கான செலவு ரூ.1.5 கோடியை கடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கொண்டு வழக்கை நடத்த பணம் இல்லாத காரணத்தினால் இந்திராணியின் மகளான வித்தேவுக்கு அன்பளிப்பாக வழங்கிய மும்பை வீட்டை விற்க பீட்டர் முகர்ஜி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மும்பையின் வொர்லியில், கடற்கரையோரம் அமைந்துள்ள மார்லோ கட்டிடத்தில் 3,000 சதுர அடி பரப்பில் ஐந்தாவது மாடியில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி என கூறப்படுகிறது. இந்த வீட்டை பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியான ஷப்னத் துக்கு பிறந்த மூத்த மகனான ராபின் முகர்ஜிக்கு, வித்தே அன்பளிப்பாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x