Published : 27 Dec 2021 08:59 AM
Last Updated : 27 Dec 2021 08:59 AM

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பின் நோக்கம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். விழாவில் பின்னர் அவர் பேசியதாவது:

பிரம்மோஸ் ஏவுகணை, மற்ற ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மற்ற நாடுகளை தாக்குவதற்காக இந்தியா தயாரிக்கவில்லை. இந்தியாவை, மற்ற நாடுகள் தவறான எண்ணத்துடன் பார்க்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காகதான் பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்யாவுடன்இணைந்து தயாரிக்கிறது. உலகில் எந்த நாடும் நம்மை தாக்க முடியாதபடி இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் பாதுகாப்பு உள்ளது என்பதை நாங்கள் காட்டி உள்ளோம்.

நமது அண்டை நாடு ஒன்று நம் மீது தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது (பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டார் மத்திய அமைச்சர்). யூரி மற்றும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல்களை அந்த நாடு நடத்தியது. இதனால், பிரதமர் எடுத்த முடிவின்படி, நாம் அந்த நாட்டுக்கு உள்ளேயே சென்று தீவிரவாத புகலிடங்களை அழித்தோம்.

விமானப்படை தாக்குதல் தேவைப்பட்ட இடத்தில் அதனையும் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இதன் மூலம் இந்தியாவை யாரும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால், எல்லைக்குள் மட்டுமல்லாது, எல்லையை தாண்டித் தாக்குதல் நடத்துவோம் என்ற செய்தியை உலக நாடுகளுக்கு அனுப்பினோம். இதுதான் இந்தியாவின் பலம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x