Last Updated : 10 Mar, 2016 09:04 AM

 

Published : 10 Mar 2016 09:04 AM
Last Updated : 10 Mar 2016 09:04 AM

கர்நாடகாவில் தீமிதி திருவிழா: குண்டத்தில் தவறி விழுந்த 70 பேர் படுகாயம்

கர்நாடகாவில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவின் போது தீக் குண்டத்தில் தவறி விழுந்த 70 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கூலூர் அருகே ஹெத்தேனஹள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள மாரம்மா தேவி கோயிலில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்காக 20 அடி நீளமும் 15 அகலமும் கொண்ட தீக் குண்டம் உருவாக்கப்பட்டிருந்தது.

மாரம்மா கோயில் பூசாரி கும்மஞ்சிபாளையா நாகராஜ் அதிகாலை 4.30 மணிக்கு முதலில் நெருப்பில் இறங்கி வேண்டுதலில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான பக்தர் தங்களது பூஜை பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தீயில் எரித்தனர். இதனால் தீக் குண்டத்தில் எரியும் தனல் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தீயில் இறங்கி, ஓடத் தொடங்கினர்.

ஏற்கெனவே தீக் குண்டத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் கவர்கள் போடப்பட்டதால், உருகிய பிளாஸ்டிக் பக்தர்களின் காலில் ஒட்டியுள்ளது. இதனால் பக்தர்கள் தீயில் ஓட முடியாமல், தடுமாறி தீக் குண்டத்தில் விழுந்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற பக்தர்கள் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அப்போது ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்ததில் 70 பேர் தீக் குண்டத்தில் விழுந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் துமகூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் பூசாரி நாகராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஹேமந்த் உட்பட 20 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆபத்தான நிலையில் உள்ள 20 பேரும் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மற்றும் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x