Last Updated : 22 Dec, 2021 07:30 AM

 

Published : 22 Dec 2021 07:30 AM
Last Updated : 22 Dec 2021 07:30 AM

மம்தா வெற்றிக்கொடி; கொல்கத்தா தேர்தலில் திரிணமூல் அபார வெற்றி: பாஜகவுக்கு 3 இடம்


கொல்கத்தா :கொல்கத்தா மாநகராட்சியில் 144 வார்டுகளுக்கும் நடந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 134 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. பாஜகவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 144 வார்டுகளுக்கும் 4,959 வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தனியாக களம் கண்டன. கொல்கத்தாவில் நடந்த தேர்தலில் 40.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர், 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம்சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்தநிலையில் நேற்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்திலிருந்தே திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள்தான் முன்னிலை பெற்றனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 144 இடங்களில் 134 இடங்களைக் கைப்பற்றி அசுரவெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 3 இடங்களும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும் வென்றன. .

கொல்கத்தா நகராட்சித் தேர்தலில் பாஜக மோசமான தோல்வி அடைந்ததற்கு தேர்தல் ஆணையர் சவுரவ் தாஸ் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்துஅதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மே.வங்கத்தின் அரச மருமகன் கணிப்பை நனவாக்கிய தேர்தல் ஆணையருக்கு வாழ்த்துகள். நீங்கள் எடுத்த முக்கிய நடவடிக்கையான பிபிடி எந்திரம் இல்லாமல் இவிஎம் எந்திரம் பயன்படுத்தப்பட்டது , கண்காணிப்பு கேமிரா இல்லாமல் தேர்தல் நடத்தினீர்கள். மக்களிடம் அச்சமான சூழலை வரவழைத்துதான் வாக்குப்பதிவு நடந்தது இதற்கு போலீஸாரும் உதவி. திரிணமூல் காங்கிரஸ் 134, பாஜக-3, இடதுசாரிகள்-2,காங்கிரஸ்-2. உங்களின் கடினமான பணிக்கு விருது கிடைக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்

ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி குறித்து கூறுகையில் “மக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பணிகளை ஏற்றுக்கொண்டனர், அதனால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த கொல்கத்தா நகராட்சித் தேர்தலில் 114 வார்டில் திரிணமூல் காங்கிரஸ் வென்றது, இடதுசாரிகள் 15 வார்டிலும், பாஜக 6 வார்டிலும், காங்கிர் கட்சி 5 வார்டிலும் வென்றன. ஆனால், சில மாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x