Published : 10 Dec 2021 06:25 PM
Last Updated : 10 Dec 2021 06:25 PM

இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான்: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று

இந்தியாவில் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.இன்று தொற்று உறுதியானவர்களில் 7 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 வயது குழந்தையும் அடக்கம். மூன்று பேர் மும்பை நகரைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

முன்னதாக இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலர், லாவ் அகர்வால் ஒமைக்ரான் பரவல் பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அவர் பேட்டியளித்தபோது இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 25 ஆக இருந்தது.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த 93 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 83 பேர் ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 13 பேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இதுவரை உலகம் முழுவதும் 59 நாடுகளில் கரோனா பரவியுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் 2936 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதுதவிர 78,054 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இந்த வேளையில் நாட்டில் மக்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் இப்போது மிகவும் ஆபத்தான ஏற்புடையது அல்லாத வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதற்குப் பின்னரும் முகக்கவசம் முக்கியம்.

ஒமைக்ரானுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை ஏதுமில்லை. கரோனாவின் மற்ற உருமாறிய வைரஸ் பாதிப்புக்கான அதே சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. நாட்டில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் என்பது 0.73% க்கும் கீழ் உள்ளது. கடந்த 14 நாட்களாக அன்றாட பாதிப்பு 10,000க்கும் கீழ் இருக்கிறது.

கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே ஒட்டுமொத்த பாதிப்பில் 43% பதிவாகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் பேசுகையில், "பிரிட்டனிலும், பிரான்ஸிலும் ஒமைக்ரானால் அடுத்த அலை உருவாகியுள்ளது. இந்த புது உருமாறிய வைரஸ் ஆச்சர்யங்கள் நிறைந்ததாக, புதிய திருப்பங்களைத் தருவதாக உள்ளது. ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவிதில் ஒருபோதும் சுணக்கம் காட்டக் கூடாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x