Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: வழிபாட்டு தலங்கள் சட்டத்தை ரத்து செய்ய பாஜக எம்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி

உ.பி. சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுராகிருஷ்ண ஜென்மபூமி விவகாரத்தை பாஜக எம்.பி. ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பினார். மேலும் தற்போதுள்ள நிலையை ரத்துசெய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் நேற்று மாநிலங்களவையில் பேசிய தாவது:

1991-ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. இதுஎந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதை தடை செய்கிறது. மேலும் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை, நாடு சுதந்திரம் அடைந்த நாளில்இருந்தவாறே பராமரிக்க வேண்டும் என்கிறது.

அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி தொடர்பான வழக்குகளுக்கு மட்டும் இந்த சட்டம் விதிவிலக்கு அளிப்பது பாரபட்சமானது. இந்த சட்டம் சம உரிமைக்கான அரசியலமைப்பு விதியை மட்டுமல்ல, அரசியலமைப்பு முகவுரையின் ஒரு பகுதியாக இருக்கும் மதச்சார்பின்மை யையும் மீறுகிறது. இதை எதிர்த்து எந்த குடிமகனும் நீதிமன்றம் செல்ல முடியாது என்று இந்த சட்டம் கூறுவது விசித்திரமானது.

கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் பிற மத இடங்களை வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் பலவந்த மாக ஆக்கிரமித்ததற்கு சட்டப்பூர்வ புனிதத்தை இந்த சட்டம் வழங்குகிறது. தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான இந்த சட்டம், இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் பவுத்தர்கள் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான உரிமையை பறித்துள்ளது. எனவே இந்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் குமார் ஜா பேசும்போது, “1991-ம் ஆண்டு சட்டம், மத ஒற் றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. மதக்கலவரங்களால் நாடுபோதுமான அளவு பாதிக்கப்பட் டுள்ளது. இந்தியாவின் சமூக கட்டமைப்பை நாம் சீர்குலைக்க கூடாது” என்றார்.

அயோத்தி, வாரணாசியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என்று உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த வாரம் ட்வீட் செய்த நிலையில், மாநிலங்களவையிலும் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்ட முதல் பாஜக மூத்த தலைவர் மவுரியா ஆவார்.

17-ம் நூற்றாண்டு மசூதி

உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி எனும் கோயில் உள்ளது. இது, கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. இதற்கு முன் அங்கிருந்த பழமையான கோயில்இடிக்கப்பட்டு அதன் பாதி நிலத்தில் ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இதை முகலாய மன்னர் அவுரங்கசீப், 17-ம் நூற்றாண்டில் கட்டினார்.

அயோத்தியில் நிலவியதை போலவே மதுராவிலும் பிரச்சினை இருந்து வந்தது. 1968 அக்டோபரில் மசூதியை நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தத் தகராறு தீர்க்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் அயோத்தி விவகாரத்தால் இது புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கோயில் - ஈத்கா வளாகம் முழுவதையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோருகின்றன.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x