Published : 04 Mar 2016 10:15 AM
Last Updated : 04 Mar 2016 10:15 AM

நாடாளுமன்றத் துளிகள்: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு

மக்களவை, மாநிலங்களவைகளில் நேற்று உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள், அமைச்சர்களின் பதில்கள் உள்ளிட்டவற்றின் சுருக்கமான தொகுப்பு:

33 சோலார் பூங்காக்கள்

மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

சூரிய ஒளி மின்சாரத்துக்கான உற்பத்திச் செலவைக் குறைப்பதில் ஊக்கத் தொகை அளிப்பது உட்பட ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 33 சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு ஏல முறை ஏற்கெனவே ரூ.4.34 கிலோ வாட் என்ற அடிப்படையில் பயனளித்துள்ளது.

விபத்துக்கு அவசர உதவி எண்

சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி:

சாலை விபத்துகளின்போது அழைப்பதற்கு தேசிய அளவிலான உதவி எண் 1033 விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (ஐஹெச்எம்சிஎல்) இதற்கான கால் சென்டர்களை அமைக்கும் பணியில் ஈடுபடும். நான்கு மண்டலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்படும். தெற்கு மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம், தெலங்கானா, அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கி மைசூரில் கால் சென்டர்கள் அமைக்கப்படும்.

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு

சட்ட அமைச்சர் சதானந்த கவுடா:

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரம், மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்பு இம்மசோதா குறித்து அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். ஆனால், இதற்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது.

6 லட்சம் காலிப் பணியிடங்கள்

பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 37 லட்சத்து 16 ஆயிரத்து 520 பணியிடங்களில் 6 லட்சத்து 2, 325 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 5 லட்சத்து 33 ஆயிரத்து 81 பணியிடங்கள் குரூப் சி தரநிலை, 51 ஆயிரத்து 478 பணியிடங்கள் குரூப் பி தரநிலை, 17, 766 குரூப் ஏ தரநிலை சார்ந்தவை.

10 லட்சம் வீடுகள்

வீட்டு வசதித் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ:

நகர்ப்புற ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் இதுவரை 10 லட்சத்து 17 ஆயிரத்து 423 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், ராஜீவ் ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 13 லட்சத்து 92 ஆயிரத்து 589 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதில், நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 383 வீடுகளும், ராஜீவ் ஆவாஸ் யோஜனாவின் கீழ் 17 ஆயிரத்து 40 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x