Published : 18 Nov 2021 06:32 PM
Last Updated : 18 Nov 2021 06:32 PM

டெல்லியில் லாரிகள் நுழைய 21-ம் தேதி வரை தடை: பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல்

காற்று மாசு எதிரொலியாக டெல்லி நகருக்குள் வரும் 21-ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்தது.

இதனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

காற்று தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்குத் திரும்புமாறு அறிவித்துள்ளது.

அதேபோல் அண்டை மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50% பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

வரும் 21 ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இடிப்புப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் உள்ள 11 அனல் மின் நிலையங்களில் 5 மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி நகருக்குள் வரும் 21ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையர் மணீஷ் குமார் அகர்வால் கூறியதாவது:

டெல்லி நகருக்குள் வரும் 21ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது. வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய குறிப்பிட்ட நடைமுறைகளை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அனைத்து லாரிகளும் டெல்லி எல்லைக்கு வெளியே உள்ள குடோன்கள், போக்குவரத்து மையங்களில் தங்கள் சொந்த பொறுப்பில் நிறுத்திக்கொள்ள வேண்டும். காற்று தர நிர்வாக ஆணையத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் டெல்லி நகருக்குள் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி உள்ளிட்ட அழுகும் பொருட்களை கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x