Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

கேரளாவில் கல்வியறிவு தேர்வில் 89% மதிப்பெண் பெற்ற 104 வயது மூதாட்டி

கேரளாவில் கல்வியறிவு இல்லாதமுதியவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். இத்திட்டத்தில் கோட்டயம் மாவட்டம் ஆயர்குன்னம் பகுதியைச் சேர்ந்த குட்டியம்மாள் என்ற 104 வயது மூதாட்டி சேர்ந்தார்.

இத்திட்டத்தின் கீழ் படிப்பவர்களுக்கு சமீபத்தில் கல்வியறிவுத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு எழுதிய குட்டியம்மாள் 100-க்கும்89 மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தி உள்ளார். பள்ளிக்கே செல்லாத இவர் கணக்கு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்.

குட்டியம்மாள் படிப்பதற்கு அருகில் உள்ள ரெஹ்னா என்ற பெண் உதவி செய்துள்ளார். ‘‘தினமும்மாலையில் வகுப்புக்கு குட்டியம்மாள் தயாராக இருப்பார். அவருக்கு பார்வையும் செவித்திறனும் சற்று குறைவு என்பதால் பாடங்களை சத்தமாகச் செல்வேன். 3 மாத வகுப்புகளில் அவற்றை குட்டியம்மாள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார்’’ என்கிறார் ரெஹ்னா. குட்டியம்மாளுக்கு 16 வயதில் திருமணமாகியுள்ளது. அவரது கணவர் டி.கே.கோந்தி 2002-ல்இறந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள். மூத்த மகன் கோபாலனுடன் குட்டியம்மாள் வசித்து வருகிறார்.

கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி தனது ட்விட்டர் பதிவில்,‘‘சாதிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வயது தடையில்லை. குட்டியம்மாளுக்கும் புதிதாக கற்பவர்களுக்கும் மரியாதையும் அன்பும் கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x