Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது: பிர்சா முண்டா பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி புகழாரம்

ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மரபணு ஆலோசனை அட்டை திட்டத்தை ம.பி. அரசு தொடங்கியுள்ளது. போபாலில் நேற்று நடைபெற்ற விழாவில் பயனாளி ஒருவருக்கு மரபணு ஆலோசனை அட்டையை பிரதமர் மோடி வழங்கினார். படம்: பிடிஐ

போபால்

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமுதாயத்தினரின் பங்கு அளப்பரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீவிரமாக போராடினார். அவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் நேற்று பழங்குடியினர் கவுரவ தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மத்திய பிரதேசத்தில் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ‘ரேஷன் ஆப்கே கிராம்' திட்டம், ரத்த சோகை தடுப்பு திட்டத்தை அவர் தொடங்கினார். மேலும் நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

போபாலில் நடந்த விழாவில் மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய்சாகன்பாய் படேல்,, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின தலைவர்களின் வரலாற்றை புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமை. அந்நிய ஆட்சிக்கு எதிராக, காசி கரோ இயக்கம், மிசோ இயக்கம், கோல் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. கோந்த் மகாராணி வீர துர்காவதியின் துணிச்சல், ராணி கமலாபதியின் தியாகத்தை நாடுஒருபோதும் மறக்காது. சத்ரபதி சிவாஜிக்கு பிறகு வந்த தலைமுறையினரை இணைப்பதில் ஷிவ்சாஹிர் பாபாசாஹிப் புரந்தரே முக்கிய பங்காற்றினார்.

தேசத்தை கட்டமைப்பதில் பழங்குடியின சமுதாயத்தின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களின் பங்களிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சொல்லப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் தங்களது சுய நல அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தனர். பழங்குடி மக்களை மறந்துவிட்டனர்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு நாட்டின் இதர பகுதிகளில் கிடைப்பது போல பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவசமின்சாரம், எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய பிரதேசத்தின் ஹபிகன்ஜ் ரயில் நிலையம் தரம்உயர்த்தப்பட்டு, ராணி கமலாபதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, பிர்சா முண்டா நினைவாக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 25 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று காலையில் திறந்து வைத்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x