Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM

ஆயுதங்களை எடுத்து செல்ல சாலை இல்லையென்றால் எல்லையை பாதுகாக்க எவ்வாறு போரிட முடியும்?- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி

சீன எல்லைப் பகுதியில் உத்தரா கண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் அடிக்கடி நடப்பதால், உத்தராகண்ட் எல்லைப் பகுதிகளில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாலை வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களை இணைக்கும் வகையிலும் எல்லையில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன்படி ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரத்தில் இருவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 670 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கு மரங்கள், பாறைகளை வெட்டி சாலை அமைப்பதால் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்து ஆராய அமைக்கப்பட்ட 21 பேர் அடங்கிய நிபுணர் குழு, ‘‘மலைப் பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கலாம்’’ என்று பரிந்துரைத்தது. இதையேற்று 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இவ்வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:

பிரம்மோஸ் ஏவுகணை 42 அடி நீளம் கொண்டது. இந்த ஏவுகணை, ஏவுகணை தளங்களை எடுத்துச் செல்ல 10 மீட்டர் அகலமான சாலை தேவை. கடந்த 1962 ஆண்டு போரின் போது ஏற்பட்ட நிலை மீண்டும் நேரிடக்கூடாது. சுற்றுச்சூழலை காரணம் காட்டி சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது தேச நலனுக்கு விரோதமானது. ஆயுதங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லையென்றால் எல்லையை பாதுகாக்க வீரர்களால் எவ்வாறு போரிட முடியும்?

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பன்னாட்டு நிபுணர்களின் ஆலோ சனையின்படி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே 10 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தொண்டு அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கான்சால்வஸ், "சாலையை விரிவாக்கம் செய்தால் இமய மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதன்காரணமாக ராணுவ வீரர்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என்று வாதிட்டார்.

அதன்பின்னர் நீதிபதி சந்திரசூட் அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x