Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த பாரா தடகள வீரர் வெங்கடேஷுக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெறும் கே.ஒய்.வெங்கடேஷ்.

புதுடெல்லி

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தபாரா தடகள வீரர் கே.ஒய்.வெங்கடேஷ்(44) பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார். முன்னதாக, 4 அடி 2 அங்குலம் மட்டுமே உயரம் உடைய இவர், விருதைப் பெற மேடைக்கு சென்றார். அப்போது வெங்கடேஷ் குள்ளமாக இருப்பதை உணர்ந்த குடியரசுத் தலைவர், அவர் நின்றிருந்த இடத்துக்கு இறங்கிச் சென்று விருதை வழங்கினார்.

மேடையிலிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கிய போது, விருதுக்குதேர்வானவர்கள் கீழிருந்து படிகளில் ஏறிவந்து ஒரு படி கீழிருந்தபடி விருதை பெற்றுக் கொண்டனர். ஆனால் 4 அடி 2 அங்குலம் மட்டுமே உயரம் உடைய வெங்கடேஷ் விருதைப் பெற சென்றபோது, அவரது உயரம் குறைவாக இருப்பதை அறிந்த குடியரசுத் தலைவர், அவர் நிற்கும் இடத்தில் இறங்கி விருதை வழங்க விரும்பி சற்று தள்ளி நிற்குமாறு கூறினார்.

பின்னர் அவர் நின்றிருந்த இடத்துக்கு இறங்கிச் சென்ற குடியரசுத் தலைவர் விருதை வழங்கினார். இது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

6 பதக்கங்கள்

விளையாட்டுத் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் வெங்கடேஷ் ஆற்றிய பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு குறைவான உயரம் உடையவர்களுக்காக நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் இவர்தான். இந்தப் போட்டியில் தடகளம், பாட்மின்டன் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். இதற்காக இவரது பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x