Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM

மலிவு விலை தேயிலை இறக்குமதியால் உள்நாட்டில் தேயிலை தொழில் கடும் பாதிப்பு

கொல்கத்தா/கொச்சி

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் மலிவு விலையிலான தேயிலை இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் தேயிலைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டில் தேயிலை விலை கடுமையாக குறைந்து வரும் சூழலில் வெளிநாட்டு இறக்குமதியால் உள்நாட்டு தேயிலை உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் இறக்குமதி செய்யப்படும் தேயிலை மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டில் தேயிலை உற்பத்தி செய்வோரை இறக்குமதி தேயிலை கடுமையாக பாதித்துள்ளதாக தென்னிந்திய ஒருங்கிணைந்த காபி, தேயிலை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (உபாசி)தலைவர் எம்.பி. செரியன் தெரிவித்துள்ளார். இறக்குமதி காரணமாக உள்நாட்டில் தேயிலை ஏலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தேயிலை தேவை இறக்குமதி மூலம்ஈடுகட்டப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாளத்திலிருந்து மலிவு விலை தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு அது இங்கு பாக்கெட்களில் மாற்றி விற்பனை செய்வோருக்கு விற்கப்படுவதாக இந்திய தேயிலை வாரியத்தின் தலைவர் பி.கே. பேஜ்பரூவா குறிப்பிட்டுள்ளார். இது தவிர உள்நாட்டு தேயிலை தொழிலை பாதிக்கும் வகையில் வியட்நாம், இந்தோனேசியா, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்தும் தேயிலை இறக்குமதியாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் தேயிலை இறக்குமதி 34% அதிகரித்து 16.97 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 12.65 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வாரியத்தின் புள்ளிவிவரப்படி 2020-ம் ஆண்டில் மொத்தம் 23.79 மில்லியன் கிலோ இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு (2019) இறக்குமதி செய்யப்பட்டதை விட 50% அதிகமாகும். 2019-ல் 15.85 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் மற்றும் இந்தோனேசியா விலிருந்து ஒரு கிலோ தேயிலை ரூ.80 என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ.180 முதல் ரூ.220 வரை உள்ளது. உள்நாட்டு தேயிலை விலையை விட இறக்குமதி செய்யப்படும் தேயிலை விலை ஆண்டுக்காண்டு தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதிகரிக்கும் இறக்குமதி

வெளிநாடுகளிலிருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேயிலைவாரியம் கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் தேயிலையை இங்கு விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையான காலத்தில் மொத்தம் 60.73 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான தேயிலை அளவு 23.43 மில்லியன் கிலோ மட்டுமே என குறிப்பிட்டிருந்தது.

உலகிலேயே தேயிலை உற்பத்தியில் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. இங்கு ஆண்டு உற்பத்தி 1,300 மில்லியன் கிலோவாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக உறவு அல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு வரி விதிக்கப்படுவதில்லை. இதற்கு சாஃப்டா வர்த்தக ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படுவது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இறக்குமதி செய்யப்படும் தேயிலையில் பெருமளவு உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்விதம் அனுப்பப்படும் தேயிலையில் பெரும்பகுதி வியட்நாம், இந்தோனேசியா, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை தேயிலையாகும்.

உள்நாட்டு தேயிலை விலையை விட இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை விலை குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு 100 சதவீத இறக்குமதி வரி செலுத்திய பிறகு அதை அனுமதிக்கத்தான் வேண்டியுள்ளது. ஏனெனில் உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) விதிமுறைகள் அதைத்தான்வலியுறுத்துகிறது. மத்திய அரசு இறக்குமதியை தடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் மறு ஏற்றுமதிக்காகத்தான் தேயிலை இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை கண்காணித்தால் போதும் என்று பேஜ்பரூவா சுட்டிக்காட்டினார்.

தேயிலை விலை குறைந்து வருவதால் தேயிலை நிறுவன பங்குகள் விலையும் சரிந்துள்ளது. குறிப்பாக பாம்பே புர்மா, துன்சேரி டீ, குட்ரிக்கி, ஹாரிசன்ஸ் மலையாளம், ஜேம்ஸ் வாரென், ஜேஸ்ரீ டீ அண்ட் இண்டஸ்ட்ரீஸ், மெக்லியோட் ரஸ்ஸெல் மற்றும் தெராய் டீ ஆகிய நிறுவன பங்குகள் 30% அளவுக்கு சரிந்தன.

பிசினஸ்லைன் செய்தி எதிரொலி.. தேயிலை வாரியம் உடனடி நடவடிக்கை

‘தி இந்து’ குழுமத்தின் பிசினஸ்லைன் நாளிதழில் வெளியான மேற்கண்ட செய்தியை அடுத்து, அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய தேயிலை வாரியம் எடுத்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் தேயிலைத் தூள்கள் இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையுடன் கலந்து விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள், ஏஜென்டுகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டார்ஜீலிங், காங்ரா, அசாம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் தேயிலைக்கு உலகெங்கிலும் மிகச் சிறப்பான வரவேற்பு உள்ளது. இவை அனைத்துமே புவியியல் சார் குறியீடு பெற்ற தேயிலையாகும். இவற்றுடன் இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை தேயிலைகளை கலந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஷோபா ராய், வி.சஜீவ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x