Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருது விழா நடத்தப்படவில்லை. அந்த ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 2021-ம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். காலையில் பாதி பேருக்கும் மாலையில் மீதி பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன்எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் களை பாடியுள்ளார். கரோனா காரணமாக கடந்த 2020-ம்ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2001-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா,பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர். பின்னணி பாடகி சித்ரா, மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ராமகாஜனுக்கு பத்ம பூஷண், சிற்ப கலைஞர் சுதர்சன் சாஹோவுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங் கப்பட்டன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x