Published : 04 Nov 2021 08:00 PM
Last Updated : 04 Nov 2021 08:00 PM

பஞ்சாபில் கைதியின் முதுகில் தீவிரவாதி எனப் பொறித்து சிறை அதிகாரிகள் சித்திரவதை: அகாலி தளம் கண்டனம்

படம் : ட்விட்டர் தளம்

சண்டிகர்

பஞ்சாபில் கைதியின் முதுகில் தீவிரவாதி என இரும்புக் கம்பியால் பொறித்து சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்துள்ளனர். இச்சம்பவத்தின்மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் உள்ள சிறையில் 28 வயது கைதி ஒருவர் இரும்புக் கம்பியால் முதுகில் 'தீவிரவாதி' என முத்திரை குத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு அகாலி தளம் கட்சித்தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

"பர்னாலாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதி கரம்ஜித் சிங், சிறை கண்காணிப்பாளரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது முதுகில் இரும்பு கம்பி கொண்டு பொறிக்கப்பட்ட "அட்வாடி" என்ற வார்த்தை பயங்கரவாதி என்று பொருள்படும்! இப்படி செய்துள்ளது அருவருப்பானது மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை கண்காணிப்பாளரை உடனடியாக இடைநீக்கம் (suspension of Jail Superintenent) செய்யவும் என்று நாங்கள் கோருகிறோம்.

சீக்கியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பஞ்சாபில் காங்கிரஸின் தீய நோக்கம் இது''

இவ்வாறு மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்று துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x