Last Updated : 30 Oct, 2021 03:12 AM

 

Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 03:12 AM

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்: முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு; கண்ணீரில் மூழ்கிய கர்நாடக மக்கள்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு,கர்நாடக மக்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட திரைப்பட ரசிகர்களால் ‘அப்பு’ என்றும், ‘பவர் ஸ்டார்’ என்றும்அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய மகனாவார்.

புனித் ராஜ்குமார், 1975 மார்ச் 17-ம் தேதி சென்னையில் பிறந்தார். 6 மாத குழந்தையாக இருந்தபோதே ‘பிரேமத கனிகே’, ‘ஆரத்தி’ ஆகிய கன்னட படங்களில் தோன்றிய புனித்ராஜ்குமார், பின்னர் வசந்த கீதா, ஹொச பெளக்கு உள்ளிட்ட 14 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'பெட்டத ஹூவு' திரைப்படத்தில் நடித்த புனித், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார்.

கடந்த 2002-ம் ஆண்டு ‘அப்பு’ திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அபி, ஆகாஷ், அரசு, அஜய், ராஜகுமாரா உள்ளிட்ட 29 படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தார். இறுதியாக இவர் நடித்த ‘யுவரத்னா’ திரைப்படம் கடந்த ஏப்ரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஜேம்ஸ், திவித ஆகிய திரைப்படங்களில் புனித் ராஜ்குமார் நடித்து வந்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக்,சோமண்ணா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, நடிகர்கள் ரவிச்சந்திரன், தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தகவலறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிந்ததும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. கடைகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டன‌. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு ஊழியர்கள் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணிஅளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். இதை செய்தியாளர்களிடம் அமைச்சர் அசோக் தெரிவித்தார். முழு அரசு மரியாதையுடன் அவரதுஇறுதி ஊர்வலம் நடக்கும். உணர்ச்சிமயமான தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

விக்ரம் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரங்கநாத் கூறும்போது, ‘‘மருத்துவமனைக்கு கொண்டுவந்த போதே அவரது இத‌யம் செயல்படவில்லை. அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கி 3 மணி நேரம் அனைத்துவிதமான சிகிச்சைகளையும் மேற்கொண்டோம். எங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் உடல் சதாசிவநகரில் உள்ளஅவரின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலைப் பார்த்து மனைவி அஷ்வினி ரேவந்த், மகள்கள் திரிதி, வந்திதா, சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமய்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் புனித் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து கண்டீரவா ஸ்டேடியத்துக்கு புனித் உடல் கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கன்னட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

கண்ணீரில் திரையுலகம்

புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி வெளியானதும் ஏராளமான கன்னட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மருத்துவமனைக்கு வந்து கண்ணீர்விட்டு அழுதனர். நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் பல பகுதிகளில் ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x