Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

கேரள மோசடி தொழிலதிபர் மான்சோன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மான்சோன் மாவுங்கல். இவர் எர்ணாகுளத்தில் பழங்காலப் பொருட்கள் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வந்தார். காவல் துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த இவர் கேரளாவில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நபர்களில் ஒருவராக விளங்கி வந்தார். இந்நிலையில், இவர் மீது முதல்வர் பினராயி விஜயனிடம் தொழிலதிபர்கள் சிலர் நேரடியாக புகார் அளித்தனர். அதில் பழங்காலப் பொருட்கள் எனக் கூறி போலியானவற்றை மாவுங்கல் ஏமாற்றி தங்களிடம் விற்றதாக அந்தப் புகாரில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போலீஸார் அவரை அண்மையில் கைது செய்தனர். அதன் பிறகு, அவர் மீது ஏராளமான மோசடி புகார்கள் குவிய தொடங்கியுள்ளன. எனவே, அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், மான்சோன் மாவுங்கல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக 17 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் மான்சோனின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியரின் மகள் ஆவார். தனது கல்விக்கு உதவுவதாக ஆசை வார்த்தை கூறி இரண்டு ஆண்டுகளாக மான்சோன் தன்னை பலாத்காரம் செய்து வந்ததாக அந்தப் புகாரில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரை அடுத்து மான்சோன் மாவுங்கல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x