Last Updated : 14 Oct, 2021 03:26 PM

Published : 14 Oct 2021 03:26 PM
Last Updated : 14 Oct 2021 03:26 PM

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக பாணியில் இந்துத்துவாவைக் கையில் எடுக்கும் இதர கட்சிகள்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலைப்பாடு மாறத் தொடங்கியுள்ளது. பாஜக பாணியில் இந்துத்துவாவை இதர கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.

உ.பி.யில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்தர மோடியை எதிர்த்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.

உ.பி.யில் ஆளும் பாஜக, தொடக்கம் முதலாகவே தீவிர இந்துத்துவா அரசியலை கையில் எடுத்துச் செயல்படுகிறது. இதனால், அக்கட்சியை உ.பி.யில் வெல்ல மிதமான இந்துத்துவா அரசியலைத் தாமும் எடுக்க இதர கட்சிகள் தொடங்கியுள்ளன.

சில தினங்களுக்கு முன் வாரணாசி சென்றிருந்த பிரியங்கா, அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தார். பிறகு, குஷ்மந்தா மாதா மற்றும் ஹனுமன் கோயில்களுக்கும் பிரியங்கா சென்றார். தன் நெற்றியில் சந்தனப் பட்டையுடன் குங்குமப் பொட்டை இட்டுக் கொண்டார். கழுத்தில் ருத்ராட்ச மாலையும் இருந்தது. பார்ப்பதற்கு ஒரு பெண் துறவி போல் காட்சியளித்தார் பிரியங்கா.

அதே தோற்றத்தில் மேடை ஏறியவர் தன் உரைக்கு முன்பாக 'ஜெய் மாதா தி', 'ஹர் ஹர் மஹாதேவ்' எனவும் கோஷமிட்டார். இதற்கு முன் உ.பி.யில் மற்ற இடங்களிலும் உள்ள முக்கியக் கோயில்களுக்குச் செல்ல பிரியங்கா தவறவில்லை.

இதனிடையே, சமாஜ்வாதியின் தலைவரும் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவும் பல முக்கியக் கோயில்களுக்குச் சென்றார். அலகாபத்தில் மக்மேளாவிற்குச் சென்று புனிதக் குளியல் முடித்தார். உ.பி.யின் சித்ரகுட்டின் பிரபல கோயிலிலும் தரிசனம் செய்தார். மிர்சாபூர் சென்றபோது அதன் அருகிலுள்ள விந்தியாசல்லில் உள்ள விந்தியாவஷினி கோயிலிலும் சிறப்புப் பூஜை நடத்தினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அங்கு தனது குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்யப்போவதாகவும் அகிலேஷ் அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான சிபையில் 51 அடி உயரத்திலான கிருஷ்ணர் சிலையையும் அவர் நிறுவியுள்ளார்.

இவ்விரண்டு கட்சித் தலைவர்கள் வரிசையில் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜின் தலைவருமான மாயாவதியும் சேர்ந்துள்ளார். தனது தேசியப் பொதுச் செயலாளர் சத்தீஷ்சந்த் மிஸ்ராவை அயோத்திக்கு அனுப்பி ராமரை தரிசனம் செய்ய வைத்தார். தனது மேடைகளில், ''பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால் காசி, மதுரா, அயோத்தியில் நடைபெறும் கோயில் வளர்ச்சிப் பணிகளை நிறுத்தாது'' எனவும் அறிவித்துள்ளார்.

இதற்கும் முன்பாக பிராமணர்கள் ஆதரவைப் பெறவேண்டி உ.பி. முழுவதிலும் மாயாவதி கட்சி சார்பில் பிராமணர் சபைகள் நடத்தப்படுகின்றன. இதுபோல், பாஜக பாணியில் இந்துத்துவாவின் மிதமான முறையை, ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கேஜ்ரிவாலும், அடுத்து திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜியும் கையாண்டனர். இதை அவ்விருவரும் தம் முதல்வர் பதவிகளைத் தக்கவைக்க வேண்டி சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் செய்திருந்தனர்.

டெல்லியின் ஹனுமர் கோயிலுக்குச் சென்ற கேஜ்ரிவால் மேடைகளில் சுந்தர காண்டத்தையும் படித்தார். மம்தாவும் தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாகவே கொல்கத்தா காளி கோயிலுக்குச் சென்று, தீவிர பக்தை என அறிவித்தார். ''தானும் ஒரு இந்துவின் மகள் என்பதால் பாஜக தனக்கு இந்துத்துவா பாடம் எடுக்க முயல வேண்டாம்'' எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

இதில் மம்தா, கேஜ்ரிவாலுக்கு மீண்டும் வெற்றி கிடைத்து முதல்வரானார்கள். இதுபோல், உ.பி.யின் எதிர்க்கட்சிகளிடமும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x