Published : 07 Mar 2016 12:31 PM
Last Updated : 07 Mar 2016 12:31 PM

வரலாற்றை ஒருபோதும் ஒற்றை அடையாளம் ஆதிக்கம் செலுத்த முடியாது: ரொமிலா தாப்பர்

ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாகத்தில் வரலாற்று ஆய்வாளர்களான ரொமிலா தாப்பர் மற்றும் ஹர்பன்ஸ் முகியா ஆகியோர் தேசியவாதம் குறித்து உரையாற்றினர்.

ஜே.என்.யூ.வில் நவம்பர் 1970-ல் தான் இணைந்தது பற்றி தெரிவித்த ரொமிலா தாப்பர், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பெரிதும் கவலையடைந்ததாக தெரிவித்தார்.

"ஜே.என்.யூ.வை உடைக்கும் முயற்சி என்பதாகவே நான் இந்த சம்பவங்களை கருதுகிறேன். இதனாலேயே சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை ஜே.என்.யூ. மேலும் நுணுக்கமாக ஆய்வுக்குட்படுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்" என்றார் ரொமிலா தாப்பர்.

பிறகு தேசம், வரலாறு பற்றி உரையாற்றிய ரொமிலா தாப்பர், “தேசியக் கருத்தியலுக்கு வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களை ஒருங்கிணைக்கும் பகிர்ந்து கொள்ளப்படும் வரலாறாக இருப்பது அவசியம். ஒரேயொரு அடையாளம் அல்லது ஒற்றை அடையாளம் தேச வரலாற்றை ஆதிக்கம் செலுத்த முடியாது. காரணம் ஒற்றை அடையாளத்தில் எந்த ஒரு தேசியமும் இருந்ததில்லை. இது அனைத்தையும் உள்ளடக்கியவதாகவே இருக்க முடியும்.

காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசியவாதத்திற்கு மாறாக இந்த வகுப்புவாத, மதவாதம் சார்ந்த கருத்தியல்கள் அனைவரும் புறந்தள்ளுகிறது. அதாவது தன் மதம் அல்லாதவர்களை புறமொதுக்க முயற்சி செய்கிறது. இவர்கள் காலனியாதிக்கத்துக்கு எதிரானவர்கள் அல்ல, இவர்கள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுபவர்கள். இந்த வகையில் இரண்டு அமைப்புகள் முஸ்லிம் லீக், மற்றும் இந்து மகாசபா. இந்து மகாசபா கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவ கருத்தியல் கொள்கைகளுடைய அமைப்புகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது” என்றார்.

இவரது உரையில் திருப்தி அடைந்ததாக தெரிவித்த நிசாம் அசாப், “தேசியவாதம் நம்பத்தகுந்த வரலாற்றிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும், கடந்த காலம் குறித்த ஒருசிலரது கற்பனையைச் சார்ந்து கட்டமைக்கப்பட முடியாது என்று ரொமிலா கூறிய பகுதி எனக்குப் பிடித்திருந்தது” என்றார்.

ஹர்பன்ஸ் முகியா கூறும்போது, “ஜே.என்.யூ. விவகாரத்தை விவாதித்தல் என்பது முதுமையடைதலுக்கு எதிரான சிகிச்சையே. ஏனெனில் இது பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதாவது நிறுவனமயமான ‘உண்மைகளை’ கேள்விக்குட்படுத்தும் மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே இதன் பிரதான கருத்து.

நாம் இந்த மாணவர் கண்ணய்யா குமாரைப் பற்றி பேசும் போது மற்ற எல்லாவற்றையும் விட இவர் ஒரு இந்து என்பதை நிறுவவே நாம் முயற்சி செய்கிறோம். உமர் கலீத் தான் ஒரு நாஸ்திகவாதி என்று கூரை மீது ஏறி கதறினாலும் அவரது பெயரை வைத்து அவரை முஸ்லிம் என்றே நாம் அறுதியிடுகிறோம்” என்று ஒற்றை அடையாள சாராம்சவாத போக்குகளை சாடினார்.

டீஸ்டா செதால்வத் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி திட்டங்களுக்கு எதிராக கூட்டணி ஒன்றை உருவாக்க வலியுறுத்தினார்.

“இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற அவர்களுக்கு 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனை எதிர்ப்பது கடினமானது, பிரச்சினைக்குரியது, சிக்கல் நிறைந்தது என்றாலும் இத்திட்டத்தை முறியடிக்க நாம் ஒன்று திரண்டு போராடுவது அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x