Last Updated : 18 Mar, 2016 01:29 PM

 

Published : 18 Mar 2016 01:29 PM
Last Updated : 18 Mar 2016 01:29 PM

இஸ்லாம் சமாதானத்திற்கான மதம்: சூஃபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலக சூஃபி கூட்டமைப்பின் மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிராக குரானிலிருந்தே மேற்கோளைக் காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் நேற்று அவர் பேசும் போது, அனைத்து இந்திய சமூகங்களும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த அங்கமே என்று கூறியதோடு பன்மைவாதம் மற்றும் பன்முகத்தன்மையை வலியுறுத்தினார்

குரானிலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, ’இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்’ என்று பாராட்டினார்.

“வசுதெய்வ குடும்பகம், அதாவது உலகம் என்பது ஒரு குடும்பம் என்பதில் நம்பிக்கை வைத்து வந்திருப்பவர்களை வரவேற்கிறேன். அனைவரும் நம்மவரே, இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், நுண் சிறுபான்மையினரான பார்ஸிக்கள், நம்பிக்கை உள்ளவர்கள், அற்றவர்கள் அனைவரும் இந்தியாவின் அங்கமே.

ஒத்திசைவு, சேமநலம், கருணை, அன்பு ஆகியவை நியாயமான சமூகத்தின் அடிப்படைகளாகும். பயங்கரவாதம் நம்மை பிரித்தாள்கிறது, நம்மை அழிக்கிறது. பயங்கரவாதமும், தீவிரவாதமும் நம் காலத்தின் அழிவுச் சக்திகளாக இருக்கும் அதே வேளையில் சூஃபி மதத்தின் போதனை உலக் அளவில் தேவையாக உள்ளது.

பன்மைவாதம் மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுவது சூஃபிசம். ஹஸ்ரத் நிசாமுத்தீன் ஆவ்லியாவின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுக்கேயுரிய பிரத்யேக சத்யத்திற்கான பாதை உள்ளது. மதத்தில் வலியுறுத்தல் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நியமனம் செய்யப்பட்ட வழிபாட்டு முறைகள் உள்ளன. அதையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

சூஃபிஸத்தின் உணர்வு இதுதான். ஒருவரது நாட்டை நேசிப்பது, தங்கள் நாட்டின் மீதான பெருமை, இதுதான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விளக்குகிறது.

இந்தியாவின் இஸ்லாமிய மரபின் மதிப்புகளால் அவர்கள் உருவாகியுள்ளார்கள். இது இந்தியாவின் உயர்ந்த லட்சியங்களை ஆதரிப்பது, ஆனால் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஒரு போதும் ஏற்காதது.

அல்லாவின் 99 பெயர்களைப் பற்றி நாம் சிந்தித்தோமானால் எந்த ஒரு பெயரும் வன்முறையையோ, பலவந்தத்தையோ குறிக்கவில்லை. அதுவும் முதல் 2 பெயர்கள் கருணையையும், பரிவையும் குறிக்கிறது. அல்லா என்பவர் ரஹ்மான் மற்றும் ரஹீம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை மதத்திற்கு எதிரான சண்டையல்ல, மனிதத்தன்மைக்கும், மனிதத் தன்மையற்றதற்குமான சண்டை. பயங்கரவாதம் மதத்திற்கே அபாயமானது. பயங்கரவாதிகள் மதத்தின் கொள்கைகளை திரிக்கின்றனர், ஆனால் அதைக்காக்கவே போராடுவதாக கூறுகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த மண்ணில், தங்கள் சொந்த மக்களையே கொல்கின்றனர். மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தைப் பரப்புவோர் மதத்திற்கு எதிரானவர்கள்”

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x