Last Updated : 11 Feb, 2016 08:39 AM

 

Published : 11 Feb 2016 08:39 AM
Last Updated : 11 Feb 2016 08:39 AM

சியாச்சின் பனிச்சரிவில் 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

உயிரை காக்க உறுப்பு தானம் அளிக்க 2 பேர் ஆர்வம்



*

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி, 35 அடி ஆழ பனியில் புதைந்திருந்து 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உறுப்பு தானம் அளிக்க முன்னாள் கடற்படை வீரர் உட்பட 2 பேர் முன்வந்துள்ளனர்.

“அந்த வீரரின் நிலையில் முன்னேற்றமில்லை. தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அவரை மிகச்சிறப்பாக கவனித்து வரு கிறோம். என்ன நேர்ந்தது என துல்லியமாக தெரியாமல், அவர் எப்படி உயிர் பிழைத் திருந்தார் என்பதைக் கூற முடி யாது. ஹனுமந்தப்பாவுக்கு நினைவு திரும்பிய பிறகே, அதுபற்றி தெரியவரும்” என ராணுவ மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. உடலில் குளிரால் உறைந்து விட்ட பகுதிகளுக்கு மீண்டும் ரத்தத்தை அனுப்புவதிலும், இயல்பான வெப்பநிலையை மீட்பதிலும் சிக்கல் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதையும் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிக்கு அடியில் 6 நாட்கள் புதைந்திருந்ததால், குறைந்த ரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைவு, உடல் வெப்பம் குறைவு, பிராணவாயு பற்றாக்குறையால் பாதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு ஆகியவற்றால் ஹனுமந்தப்பா பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு

ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், அவர் நிமோனியாவால் பாதிக்கப் பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உறை பனிக் காயம், எலும்பு காயங்கள் ஏதுமில்லை.

அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு பல்துறை மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உறுப்பு தானம்

ஹனுமந்தப்பாவின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற பெண், தானாக முன்வந்து சிறுநீரகம் தானம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக தன் விருப்பத் தைத் தெரிவித்துள்ளார். லக்மிபூர் பகுதியைச் சேர்ந்த அவரின் கணவர், உறுப்பு தான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடற்படை முன்னாள் வீரர் எஸ்.எஸ். ராஜூ, ஹனுமந்தப்பாவுக்கு கல்லீரல், சிறுநீரகம் என எந்தவொரு உறுப்பையும் தானமாக கொடுக்க முன்வந்துள்ளார்.

“ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால், டெல்லி சென்று, கல்லீரல், சிறுநீரகம் என எந்த உறுப்பையும் ஹனுமந்தப்பாவுக்கு தானமாக அளிப்பேன். கவலைக் கிடமாக உள்ள சகோதரரின் உயிரை நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்” என அவர் தெரிவித் துள்ளார். எஸ்.எஸ். ராஜூ மகா ராஷ்டிராவின் பயாந்தர் பகுதியில் வசிக்கிறார்.

25-35 அடி ஆழத்தில் புதைந்திருந்தும் உயிர் தப்பியது எப்படி?

பனியில் 25-35 அடி ஆழத்தில் 6 நாட்கள் புதைந்திருந்தபோதும், ஹனுமந்தப்பா சுவாசித்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரியாவின் இன்ஸ் புருக் பல்கலைக்கழக ஆய் வாளர்கள், பனிச்சரிவில் சிக்கிய வர்கள் குறித்து நடத்திய ஆய்வின்படி, பொதுவாக பனிச் சரிவில் சிக்குபவர்கள் முதல் 15 நிமிடங்களில் மீட்கப்பட்டால் உயிர்பிழைக்க 92 சதவீதம் வாய்ப்புள்ளது.

15 நிமிடத்தைக் கடந்து விட்டால், உயிர்பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 35 சதவீதம். 130 நிமிடங்களைக் கடந்து விட்டால் ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு.

பெரும்பாலும் இக்கணிப்பு கள் 10 அடிக்குள் புதைந்திருப்பவர் களுக்குத்தான். ஆனால், ஆனால், ஹனுமந்தப்பா இந்த நேரத்தையும், ஆழத்தையும் கடந்துவிட்டார். உறைநிலைக்கும் கீழான தட்பவெப்பநிலை வேகமாக அவர் உடல்நிலையைப் பாதித்தது. அவரைச் சுற்றியிருந்த ஏராளமான பனி, அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சுவர் (இன்சுலேட்டர்) போல செயல்பட்டுள்ளது. இதனால், அவர் உடல் வெப்பநிலையும், அந்த இடைவெளியில் இருந்த காற்றுக்குமிழ்/காற்றுப்பையின் வெப்பநிலையும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.

இதனால், மீட்புக் குழுவினர் அவரைக் கண்டறியும் வரை அவர் சுயநினைவுடன் இருந்துள்ளார்.

பனிச்சரிவில் சிக்கி புதையும் நபர்கள் ஹைபோதெர்மியா எனும் உடல் உஷ்ணம் மிக வேகமாகக் குறையும் சூழலுக்கு உந்தப்பட்டு, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் நிலைக்கு ஆளாவர். இதனால், மரணம் கூட சம்பவிக்கும்.

காற்றுக்குமிழ் அளித்த வெதுவெதுப்பு, சுவாசிக்க கிடைத்த காற்று ஆகியவை காரணமாக அவர் சுயநினைவுடன் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

எனினும் 25 அடி ஆழத்தில் பனி மூடிக்கிடந்தபோதும் ஹனுமந்தப்பா 6 நாட்கள் உணவின்றி உயிருடன் இருந்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சியாச்சின் மீட்புப்பணிகளில் 150 வீரர்கள், 2 மோப்ப நாய்கள்

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில், மிகப்பெரும் அச்சுறுத்தல் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. ஊகிக்க முடியாத, மிக அபாயகரமான பருவநிலைதான்.

பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்க, 150 ராணுவ வீரர்கள் 2 நாய்களுடன் 24 மணி நேரமும் 5 நாட்களுக்கும் அதிகமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

டாட், மிஷா என்ற இரு நாய்களுடன், 150 ராணுவ வீரர்களின் தீவிர முயற்சிதான், ஹனுமந்தப்பாவை உயிருடன் மீட்க உதவியிருக்கிறது. டாட், மிஷா இரண்டுமே மிக அற்புதமான பணியைச் செய்தன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி, சியாச்சினின் வடபகுதியில் 800 x 400 அடி என்ற அளவிலான பனிச் சுவர் உடைந்து சரிந்ததில், அதன் இடிபாடுகள் ராணுவ முகாமை மூடின. சுமார் 800 x 1000 மீட்டர் பரப்புக்குள் 10 வீரர்கள் சிக்கிக் கொண்டனர். சிறப்பான துளையிடும் கருவி, தோண்டும் கருவி, மின் ரம்பங்கள், 20 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி வெப்பம், உலோகத்தை கண்டறியும் ராடார்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மீட்பு பணி தொடர்ந்தது. மிகக் கடினமான பனி என்பதால் சிறிது சிறிதாகவே உடைக்க முடிந்தது. மீட்புப் பணியில் 2 மோப்ப நாய்களும் மிகச்சிறந்த ஒத்துழைப்பை அளித்தன.

சவாலான இடங்களை விரும்பி 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்

ஹனுமந்தப்பா ராணுவத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அதில், 10 ஆண்டுகளை தன் விருப்பப்படி மிக சவாலான இடங்களிலேயே பணிபுரிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹனுமந்தப்பாவுக்கு 33 வயதாகிறது. 2002 அக்டோபர் 25-ம் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் 19-வது பட்டாலியனில் சேர்ந்தார். உடற்தகுதியும், அதிக ஈடுபாடும் கொண்டவர். ஆரம்பத்திலிருந்தே, சவாலான களங்களில் பணிபுரிய விரும்பினார்.

2003-2006 காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் மாஹோர் பகுதியில், ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையில் பணிபுரிந்தார். தொடர்ந்து, மெட்ராஸ் ராஷ்ட்ரீய ரைபிள் பிரிவில், 2008 முதல் 2010 வரை பணிபுரிந்து, அதிகபட்ச துணிச்சலையும், தீவிரவாத எதிர்ப்பில் வீரத்தையும் காட்டினார்.

வடகிழக்கு மாநிலங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு எதிராக தானாக முன்வந்து பணிபுரிந்தார்.

கடந்த 2015 ஆகஸ்ட் முதல் மிகுந்த உயரமுள்ள சியாச்சின் பனிமுகட்டில் பணிபுரிந்தார். 2015 டிசம்பர் வரை அப்பணியில் தொடர்ந்தார். சக வீரர்களுடன் நல்லுறவைப் பேணிய அவர், எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அமைதியான இடங்களை விட சவாலான பகுதிகளில் பணிபுரிவதையே அவர் விரும்பினார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x