Published : 11 Sep 2021 08:04 AM
Last Updated : 11 Sep 2021 08:04 AM

கரோனா பரவல், தடுப்பூசி: பிரதமர் மோடி ஆலோசனை

கோவிட் -19 தொடர்பான சூழ்நிலை மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்.

கோவிட் -19 தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

கோவிட் -19 சூழ்நிலை, அதை எதிர்கொள்வதற்கான சுகாதார அமைப்புகளின் தயார்நிலை, மருத்துவ ஆக்ஸிஜனின் இருப்பு மற்றும் கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கும் நாடுகள் உலகம் முழுவதும் உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவிலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. இருப்பினும், வாராந்திர தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் தொடர்ந்து 10-வது வாரமாக 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

நாட்டிலுள்ள ஒரு சில பகுதிகளில், மாவட்டங்களில், அதிக அளவில் பாதிப்புகள் இருப்பது குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

உருமாறும் வைரசை கண்காணிக்க நிலையான மரபணு வரிசைப்படுத்தலின் அவசியம் குறித்து பிரதமர் பேசினார். நாடு முழுவதும் 28 ஆய்வகங்களை இன்சாகோக் தற்போது கொண்டுள்ளது என்று அதிகாரிகள் அவருக்குத் தெரிவித்தனர். மருத்துவ ஒத்துழைப்புக்காக ஆய்வக குழுமத்துடன் மருத்துவமனை குழுமம் இணைக்கப்பட்டுள்ளது. மரபணு கண்காணிப்புக்காக கழிவுநீர் மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. சார்ஸ் கோவி2 உறுதிப்படுத்தல் மாதிரிகளை இன்சாகோக்குடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது

குழந்தைகள் சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் ‘கோவிட் அவசரகால எதிர்வினை தொகுப்பு II’-ன் கீழ் ஆதரிக்கப்படும் வசதிகளின் பெருக்கத்தின் நிலையை பிரதமர் ஆய்வு செய்தார். கிராமப்புறங்களில் நிலைமையை நிர்வகிப்பதற்காக இந்தப் பகுதிகளில் முதன்மைப் பராமரிப்பு மற்றும் வட்ட அளவிலான சுகாதார உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய மற்றும் மேம்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் கோவிட் -19, கருப்பு பூஞ்சை, எம்ஐஎஸ்-சி ஆகியவற்றின் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் இருப்பை பராமரிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்படுவது பற்றியும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சுவாசக் கருவிகளின் அதிகரிப்பு குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. கணிசமான எண்ணிக்கையிலான ஐசியு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் வரும் மாதங்களில் மேலும் சேர்க்கப்படும்.

நாடு முழுவதும் போதுமான பரிசோதனையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் பேசினார். பொது சுகாதார வசதிகளில் ஆர்டி-பிசிஆர் ஆய்வக வசதியை ஏற்படுத்த 433 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர்.

ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் மற்றும் பிஎஸ்ஏ ஆலைகள் உட்பட ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்கான முழு சூழலியலும் விரைவாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். மாவட்டத்திற்கு ஒரு அலகையாவது ஆதரிக்கும் நோக்கத்தில் 961 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகள் மற்றும் 1,450 மருத்துவ எரிவாயு குழாய் அமைப்புகளை நிறுவுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வட்டத்தில் குறைந்தது ஒரு அவசரகால ஊர்தி இருப்பதை உறுதி செய்ய ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நிறுவப்பட்டு வரும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளின் நிலைமை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். மாநிலங்களுக்கு சுமார் 1 லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசிகளை பொருத்தவரை, இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 58 சதவீதம் பேர் முதல் டோஸையும், 18 சதவீதம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி திட்டம் மற்றும் விநியோகம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், முதன்மை அறிவியல் ஆலோசகர், சுகாதார செயலாளர், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x