Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

பொறுமையை சோதிக்க வேண்டாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை. இந்த தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் அமித் சானி, பிரீத்தி சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, "ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் 2 வாரங்களில் முக்கிய முடிவெடுக்கும். எனக்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கினால் தீர்ப்பாயங்கள் தொடர்பான முழு விவரத்தை தாக்கல் செய்வேன்" என்றார்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விரைந்து அமைக்க வேண்டும். தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை 10 நாட்களில் நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு சார்பில் மேலும் காலஅவகாசம் கோரப்பட்டதால் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் நேற்று கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதாக தெரியவில்லை. எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். தீர்ப்பாயங்களில் சில பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக மத்திய அரசுகூறுகிறது. இதுவரை எத்தனைபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எங்கெல்லாம் நீதித் துறை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாமல் காலதாமதம் செய்வதன் மூலம் அவை அதிகாரமற்றவையாக மாறி வருகின்றன. பல தீர்ப்பாயங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எங்கள் முன்பு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, தீர்ப்பாயம் தொடர்பான சட்டத்துக்கு தடை விதிக்கலாம். 2-வது அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிட்டு அவற்றின் அதிகாரங்களை நீதிமன்றங்களில் ஒப்படைக்கலாம். மூன்றாவது நாங்களே தீர்ப்பாயங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பலாம்.

வழக்கின் அடுத்த விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் தீர்ப்பாயங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கிறோம். முழுமையான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x