Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

‘‘கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது. எனினும், அவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தாய், தந்தை இருவருமே இறந்ததால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது:

கரோனா தொற்று பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப் பாக தாய், தந்தைகளை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தைப் பிழிகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தை அல்லது அவர்களில் ஒருவரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்வியாக உள்ளது. எனவே, கரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளை கண்டறியும் நடவடிக்கையை, சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் படி சிறுவர் நல கமிட்டி விரைந்து நடத்த வேண்டும். அவர்களுடைய நிலை என்ன, பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன. அந்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், தாய், தந்தை அல்லது அவர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளில் யாரும் விடுபட கூடாது என்பதில் அதிகாரிகளும் கவனமாக செயல்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு மூலம் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

மேலும், அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளை சரியாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசிய லமைப்பு சட்டப்படி அனைத்து குழந்தைகளும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வி பெறுவதற்கு உரிமை உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு மாநில அரசுகளும் அவர்களின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி உச்ச நீதிமன்றத்தில் கூறும்போது, ‘‘கரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள சிறார்களுக்கு பி.எம். கேர்ஸ் பார் சில்ட்ரன்’’ திட்டத்தின் கீழ் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களில் 2,600 குழந்தைகள் இனம் காணப் பட்டுள்ளனர். அவர்களில் 418 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கி உள்ளார்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி தொடர்பான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x