Published : 27 Aug 2021 10:50 AM
Last Updated : 27 Aug 2021 10:50 AM

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை- தலிபான்களால் கூடுதல் பலம் பெறும் தீவிரவாத குழுக்கள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த அதுவும் குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அங்கிருந்த சிறைச்சாலைகளில் இருந்து பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 100 பேரும் அடங்குவர். அந்த 100 பேரும் மீண்டும் தங்கள் தீவிரவாத குழுத் தலைமையகத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் பலத்துடன் தாக்குதல் நடத்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது ஆதரவு சமூக வலைதளப் பக்கங்களில் அதன் தலைவர் மசூத் அசார், ஆட்களைச் சேர்ப்பதற்கு விடுத்த அறைகூவல் அம்பலமாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது போல் ஜம்மு காஷ்மீரை வெற்றி காண வேண்டும் என்று மசூத் அசார் பிரச்சாரம் செய்வதும் தெரியவந்துள்லது. கடந்த வாரம் ஜெய்ஷ் இ முகமது கூடாரங்கள் அனைத்திலும் ஜம்மு காஷ்மீரை கையகப்படுத்துவது தொடர்பாக பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் உளவு அமைப்புகள் கூறுகின்றன.

படம்: இந்திய ராணுவ வீரர்கள்

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மூத்த தலைவர்களும், தலிபான் முக்கியப் பிரமுகர்களும் ஏற்கெனவே பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். இந்தியாவில் நடத்தவிருக்கும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தலிபான்கள் துணையாக இருக்கும் என அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்" என்று கூறினார்.

கொல்லப்பட்ட ஜெய்ஷ் முக்கியப் புள்ளிகள்..

கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரில் இயங்க முயற்சித்த ஜெய்ஷ் இ முகமது முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது இஸ்மாயில், அப்துல் ரஷீது காஸி ஆகிய இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பாகிஸ்தான் கமாண்டார்கள். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் ஹங்கல்மார்க் வனத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அந்த இருவரும் 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள். தேசிய புலனாய்வு முகமை அவர்களைத் தேடி வந்தது. இந்நிலையில் தான் அவர்கள் கொல்லப்பட்டனர்.

படம்: புல்வாமா தாக்குதல்

அது மட்டுமல்லாமல் இஸ்மாயிலும், காஸியும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் இணைத்து வந்தனர். அவர்கள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர், காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது ஆதிக்கத்தை வேரறுக்கும் செயலாக பாதுகாப்புப் படை கருதுகிறது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக நடக்கும் நிகழ்வுகள் ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புது ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது இயக்கம் கடந்த அக்டோபர் 17, 2001ல் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாலும், அவர்களுக்கு நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கல், தாக்குதல்களைத் திட்டமிடுதல் போன்ற கூட்டுச் சதி வேலைகளில் ஈடுபட்டதாலும் ஜெய்ஷ் இ முகமது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. மசூத் அசாரு ஐ.நா.வில் அறிவிக்கப்பட்ட தேடப்படும் பயங்கரவாதி.

தேவேஷ் கே பாண்டே - இந்து ஆங்கிலம் நாளிதழ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x