Last Updated : 19 Aug, 2021 03:11 AM

 

Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டிலேயே புதிய தேசிய கல்வி கொள்கை அமல்: முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலையில் கல்வியாளர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்த‌து. இதை கர்நாடக முதல்வராக எடியூரப்பாஇருந்த போது அமல்படுத்துவதற் கான பணிகளில் ஈடுபட்டார். ஆனால் கொள்கை அமல்படுத் தப்படவில்லை.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள‌ பசவராஜ் பொம்மை, புதிய தேசிய கல்வி கொள்கை நிகழும் 2021 - 22 கல்விஆண்டிலே, நாட்டில் முதல் மாநிலமாக‌ கர்நாடகாவில் அமல்படுத் தப்படும் என கடந்த 15-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து உயர்க் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் பசவராஜ் நேற்று ஆலோ சனை நடத்தினார்.

கூட்டத்துக்கு பின் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. அரசுக்கு தனியார் கல்லூரி நிறுவனங்கள், கல்வியாளர்களின் ஆதரவு இருக்கிறது. இந்த கல்வி முறையால் கர்நாடக மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்'' என்றார்.

அவசர கதியில்..

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

கரோனா காரணமாக கடந்த 2 கல்வி ஆண்டாக ஒட்டு மொத்தகல்வித் துறையும் முடங்கியுள்ளது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இன்னும் முந்தைய பருவத் தேர்வையே எழுத முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு அவசர கதியில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது சரியாக இருக்காது. நிகழும் கல்வி ஆண்டுக்கான பாடத் திட்டம், அட்டவணை, புத்தகங்கள் உள்ளிட்டவை இன்னும் தயாராகவில்லை. அதே போல கன்னடத்தை கட்டாயமாக கற்க வேண்டும் என்ற உத்தரவால் பிற மாநில மாணவர்களும், வெளிநாடுகளை சேர்ந்த மாண வர்களும் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கர்நாடக எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறும்போது, ‘‘அரசு கல்வியாளர்கள், எதிர்க் கட்சிகளின் தலைவர்களிடம் கருத்து கேட்ட பிறகே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும். மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களை ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என்பதால், பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வி நிலையங்களாக மாற்றப் படும் அபாயம் உள்ளது. தற்போது பட்ட படிப்புகளில் 3 பாடங் கள் முதன்மை பாடங்களாக உள்ளன. இது புதிய கொள்கையில் இரண் டாக குறைக்கப்பட்டுள்ளது. இத னால் ஆயிரக்கணக்கான பேரா சிரியர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x