Last Updated : 18 Aug, 2021 01:14 PM

 

Published : 18 Aug 2021 01:14 PM
Last Updated : 18 Aug 2021 01:14 PM

7 ஆண்டு டார்ச்சரில் இருந்து விடுபட்டேன்: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அவரின் மனைவி சுனந்தா புஷ்கர் | கோப்புப்படம்

புதுடெல்லி

கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர் வழக்கிலிருந்து அவரின் கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் இன்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி 17-ம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சசி தரூர் சேர்க்கப்பட்டிருந்தார். சசி தரூர் மீது ஐபிசி 498-ஏ 306 ஆகி பிரிவின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். ஆனால் டெல்லி நீதிமன்றம் 2018ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சசி தரூருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, இதுவரை ஜாமீனில்தான் இருந்து வந்தார்.

இந்த வழக்கில் சசி தரூர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பவா ஆஜராகினார், அரசு தரப்பில் அனுல் ஸ்ரீவஸ்தவா ஆஜராகி வாதாடினார். மனுதாரர் தரப்பிலும், அரசு தரப்பிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் ஒத்திவைத்தார்.

சசி தரூர் தரப்பில் வாதத்தின் போது “ சுனந்தா புஷ்கர் வழக்கில் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர் சசி தருர் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டை பெரிதுபடுத்திகாட்டினர். சுனந்தா புஷ்கர் மரணத்தில் சசி தரூர் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் ஆதாரங்களை வெளிப்படுத்த இயவில்லை. சுனந்தா உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் கூட அவரின் உடலில் எந்த விஷமும் கலக்கவில்லை எனத் தெரிவித்தார்” என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜராகிய ஸ்ரீவஸ்தவா வாதிடுகையில் “ இறப்பதற்கு முன் சுனந்தாவுக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மனரீதியாக சசி தரூர் அவரை தொந்தரவு செய்துள்ளார். இது எதிர்பாராத மரணம் அல்ல, திட்டமிட்ட மரணம், விஷம் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் தீர்ப்பளித்தார். அதில் “ இந்த வழக்கிலிருந்து சசிதரூரை விடுவிப்பதாக” தீர்ப்பளித்தார்.

காணொலி மூலம் நடந்த வழக்கு விசாரணையில் ஆஜராகிய சசி தரூர் தீர்ப்பைக் கேட்டதும் “ கடந்த ஏழரை ஆண்டுகாலம் நான் அனுபவித்த மனரீதியான தொந்தரவுகளில் இருந்து விடுபட்டது மிகப்பெரிய நிம்மதி. நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

தீர்ப்புக் குறித்து சசி தரூர் வழக்கறிஞர் விகாஸ் பவா கூறுகையில் “ கடந்த 7 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. சசி தரூர் நீதியின் மீது தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை வைத்திருந்தார்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x