Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

ஜார்க்கண்ட் நீதிபதி கொலை பற்றி தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு: சிபிஐ அதிகாரிகள் அறிவிப்பு

தன்பாத்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி கொலை தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் கடந்த மாதம் 28-ம் தேதிகாலை நடை பயிற்சி சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆட்டோவை மோதினர். அதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் விபத்து வழக்கு என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், நீதிபதி உத்தம் ஆனந்த் மீது திட்டமிட்டு ஆட்டோவை மோதும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு ஜார்க் கண்ட் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரணமா உட்பட நாடு முழுவதும் ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நீதிபதி கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீதிபதி கொலை தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிந்தால், சிபிஐ விசாரணை அதிகாரி எஸ்.பி. விஜய் சுக்லாவின் 78277 28856 என்ற மொபைல் எண்ணுக்கோ அல்லது 011-2436 8640 அல்லது 011-2436 8641 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி விஜய் சுக்லா கூறும்போது, ‘‘நீதிபதி உத்தம் ஆனந்த் கொலைதொடர்பாக பயனுள்ள தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தன்பாத் மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x