Last Updated : 16 Aug, 2021 10:00 AM

 

Published : 16 Aug 2021 10:00 AM
Last Updated : 16 Aug 2021 10:00 AM

உலகம் எங்களை கைவிட்டது: 129 பேருடன் காபூலில் இருந்து சிறப்பு விமானம் டெல்லி வந்தது


ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலிபான் தீவிரவாதிகள் கட்டுபாட்டில் சென்றுவிட்டதால் அங்கு நிலைமை மிகமோசமாகியுள்ளது. இதனால், அங்கிருந்து 129 ஆப்கான் பயணிகளுடன் சிறப்பு ஏர் இந்தியா விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.

ஏர் இந்தியா விமானம் ஏஐ244 என்ற சிறப்பு விமானம் நேற்று காபூலில் இருந்து 129 ஆப்கான் மக்களுடன் நள்ளிரவு டெல்லி வந்து சேர்ந்தது.

டெல்லி வந்து சேர்ந்த ஆப்கானைச்சேர்ந்த ஒரு பெண் பயணி நிருபர்களிடம் கூறுகையில் “ உலகம் எங்களை கைவிட்டுவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நண்பர்கள் கொல்லப்படுவார்கள். தலிபான்கள் எங்களை கொன்றுவிடுவார்கள். எங்கள் பெண்களுக்கு இனிமேல் உரிமைகள் கிடைக்காது” எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மாணவர்

பெங்களூரில் ஒரு கல்லூரியில் பிபிஏ படித்துவரும் காபூல் நகரைச் சேர்ந்த மாணவர் அப்துல்லா மசூதி கூறுகையில் “ காபூல் நகரில் ஏராளமான மக்கள் வங்கி முன் பணம் எடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால், எந்த இடத்திலும் வன்முறை நடக்கவில்லை. ஆனால், வன்முறை இல்லை என்று கூற மாட்டேன். என்னுடைய குடும்பம் ஆப்கானிஸ்தானில்தான் இருக்கிறது. என்னுடைய விமானப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் நான் வெளிேயறினேன். பலரும் காபூலில் இருந்து வெளியேறத் துடிக்கிறார்கள” எனத் தெரிவித்தார்

காபூல் நகரம் தலிபான்கள் வசம் வந்துவிட்டதையடுத்து, அங்கிருந்து ஏராளமான மக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிக்கள் டெல்லி வந்தவாறு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அதிபரின் மூத்த ஆலோசகர் எம்பி ரிஸ்வானுல்லா அஹமதாசி டெல்லிக்கு தப்பிவந்துள்ளார். அவர் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் நிசப்தம் நிலவுகிறது.

பெரும்பாலானஅரசியல் தலைவர்கள் காபூல் நகரைவிட்டு வெளியேறிவிட்டனர். 200க்கும் அதிகமானோர் டெல்லி வந்துள்ளனர். இந்த புதிய தலிபான்கள் ஆட்சி பெண்களுக்கு அதிகமான உரிமைகளை வழங்குவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி வந்த ஆப்கான் பயணிகள்

இதற்கிடையே காபூல் நகரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று காலை காபூலில் இருந்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்படுகிறது.

காபூல் நகரம் தலிபான்கள் வசம் வந்தபோதிலும், இன்னும் இந்திய அரசு தனது தூதரகத்தை மூடவில்லை. அதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே காபூலில் இருந்து அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அங்கு செல்வதற்கு சி17 குளோப் மாஸ்டர் விமானம் தயாராக வைத்துள்ளது மத்தியஅரசு.

இதற்கிடையே காபூலில் உள்ள இந்தியத் தூரகத்துக்கு ஏராளமான ஆப்கான் மக்கள் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்துவருவதை மத்தியஅரசு உறுதி செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x