Last Updated : 13 Aug, 2021 05:35 PM

 

Published : 13 Aug 2021 05:35 PM
Last Updated : 13 Aug 2021 05:35 PM

ட்விட்டரில் மட்டும்தான் ராகுல் காந்தி சுறுசுறுப்பாக இருந்தார்; இப்போது அதுவும் இல்லை: பாஜக கிண்டல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மட்டும் சுறுசுறுப்பாக இருப்பதாக காண்பித்துக்கொண்டார், இப்போது ட்விட்டர் கணக்கும் லாக்ஆகிவிட்டது என்று பாஜக கிண்டல் செய்துள்ளது.

டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாதவது:

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கிய போது காங்கிரஸ் கட்சி ஒப்பாரி வைத்து, மத்திய அரசை கடுமையாகத் தாக்கியது.

ராகுல் காந்தி கருத்துச் சுதந்திரத்தின் பின்னால் இனிமேல் ஒளிந்து கொள்ள முடியாது. டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டநிலையில் அவரின் பெற்றோருடன் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

இந்த சம்பவம் உண்மையில் அநாகரீகமானது, சட்டவிரோதமானது, மனிதநேயமற்றது. சட்டத்தின்படி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தினர் புகைப்படங்களை வெளியிடுவது குற்றமாகும். இதில் ராகுல் காந்தி விதிமுறையை மீறி செயல்பட்டதால்தான், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், ராகுல் காந்தியைச் சாடுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கவே ராகுல் காந்தி பேசினார் என காங்கிரஸ் வாதம் செய்கிறது. பாஜக எம்.பி.யும், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் உறுப்பினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை வெளியிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இப்போது பிரச்சினை என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டது சரியானதா என்பதை சட்டம் முடிவு செய்யும். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கில்தான் ஆக்டிவாக இருப்பதாகக் காண்பித்து வந்தார். இப்போது அதன் கதவும் மூடப்பட்டுவிட்டது.
மோடி அரசு உருவாக்கிய விதிகளைகளையும் ஒழுங்குமுறைகளையும் காங்கிரஸ் பயன்படுத்தி, மீண்டும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கை மீட்கலாம்”

இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.

பாஜக பொதுச்செயலாளர் தருண் சவுக் கூறுகையில் “ டிஸ்னி வேர்ல்ட் இளவரசர் ராகுல் காந்தி, அற்பஅரசியலுக்காக பாதிக்கப்பட்டசிறுமியின் குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்டிருக்க கூடாது. இது டிஷ்னி உலகம் அல்ல, உண்மையான உலகத்தை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x