Last Updated : 12 Aug, 2021 12:18 PM

 

Published : 12 Aug 2021 12:18 PM
Last Updated : 12 Aug 2021 12:18 PM

பாஜகவின் கொடுமை தாங்காமல் தவிக்கும் பிராமணர்கள்: பிஎஸ்பி தலைவர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கொடுமை தாங்காமல் பிராமணர்கள் தவிப்பதாக பகுஜன் சமாஜின் (பிஎஸ்பி) பொதுச்செயலாளர் சதீஷ் சந்திரா மிஸ்ரா கூறியுள்ளார். மீரட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அரசு தூக்கி எறியப்படும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் தொடக்கத்தில் உ.பி.க்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு சமூகங்களை கவரும் நடவடிக்கைகளில் அம்மாநில அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இங்கு நான்கு முறை தம் கட்சி தலைவர் மாயாவதி தலைமையில் ஆட்சி செய்தது பிஎஸ்பி. தலித் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பி கடைசியாக, முஸ்லிம்கள் மற்றும் பிராமணர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தது.

அதேபோன்ற ஒரு உத்தியை இந்தமுறையும் பயன்படுத்தத் தீவிரம் காட்டுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதிலும் பிராமணர்களைக் கவரும் முயற்சியில் பிஎஸ்பி இறங்கியுள்ளது.

இதற்காக உ.பி.யின் மீரட் நகரிலும் பிராமணர்கள் பிரச்சனைகள் மீதானக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிஸ்பியின் தேசியப் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திரா மிஸ்ரா உரையாற்றினார்.

இதில், பிராமணர்கள் மீதான தனது கருத்துக்களை தெரிவித்ததாவது:

பாஜகவின் உண்மை சொரூபத்தை எங்கள் கட்சி எடுத்துக்காட்டி வருகிறது. இதற்காக உ.பி.யில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 22 பிராமணர்கள் மீதானக் கருத்தரங்குகளுக்கு பாஜக அரசு தடை விதிக்க முயல்கிறது. இதற்கு எவரும் வருகை தரக்கூடாது என லக்னோவின் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கொடுமை தாங்காமல் பிராமணர்கள் தவித்து வருகின்றனர். இதன் தாக்கமாக அவர்கள் வரும் தேர்தலில் பாஜக அரசை தூக்கி எறிவார்கள்.

இந்த அளவிற்கு பிராமணர்கள் மீதானக் கொடுமை எந்த பாஜக ஆட்சியிலும் நடைபெற்றதில்லை. இவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் போலி என்கவுண்டர்களையும் நடத்துகின்றனர்.

பிராமணர்கள் மீது மட்டும் சுமார் 700 என்கவுன்டர்கள் யோகி அரசால் நடத்தப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு என்பது அல்லாமல் குண்டர்கள் ராஜ்ஜியம் உ.பி.யில் நடைபெறுகிறது.

கான்பூரின் பிக்ரு கிராமத்தில் குற்றவாளி விகாஸ் துபே அழைத்து வரப்பட்ட வாகனம் கவிழ்க்கப்பட்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபோன்ற கொடுமைகளை இனி பிராமணர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

பிஎஸ்பி ஆட்சியில் உயரிய மதிப்பும், பாதுகாப்பும் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. இச்சமூகத்தின் 35 பேர் அமைச்சர்களாக்கப்பட்டு 15 பேருக்கு எம்எல்சி பதவிகளும் அளிக்கப்பட்டன.

இரண்டு மடங்கு வருமானம் அளிப்பதாக உறுதி கூறிவிட்டு இன்று விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்துள்ளார்கள். இவர்களது போராட்டத்தில் இதுவரை 50 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.

இதன் பிறகும் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவர்களது முழு அக்கறையும் குறிப்பாக மூன்று தொழிலதிபர்கள் மீதே உள்ளன.

இவை அனைத்தையும் பிராமணர்களின் சமூகம் பார்த்துக்கொண்டு அமைதி காக்காது. கடந்த 2007 ஆம் ஆண்டை போல் 2022 இல் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நடக்கும்.

உ.பி.யிலுள்ள 16 சதவிகித பிராமணர்கள் பெஹன்ஜியை (மாயாவதி) மீண்டும் முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x