Last Updated : 10 Aug, 2021 02:07 PM

 

Published : 10 Aug 2021 02:07 PM
Last Updated : 10 Aug 2021 02:07 PM

எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் அளித்த விருந்து; காங்கிரஸில் வலிமையான தலைமை தேவைக்கு ஆதரவு: ராகுல், சோனியா பங்கேற்கவில்லை

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ராகுல் காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது 73-வது பிறந்த நாளான நேற்று அவரின் இல்லத்தில் அளித்த விருந்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், வலிமையான தலைமை தேவை என்று சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் கபில் சிபல் முக்கியமானவர். அந்த 23 தலைவர்களில் பெரும்பாலானோர் நேற்றைய விருந்தில் பங்கேற்றார்கள்.

குலாம் நபி ஆசாத், சசி தரூர், பூபேந்திர சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, ப.சிதம்பரம் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைமையை எதிர்த்த 23 முக்கியத் தலைவர்களுடன் முதல் முறையாக எதிர்க்கட்சிகளும் சேர்ந்து விருந்தில் பங்கேற்றுள்ளது இதுதான் முதல் முறையாகும். பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைமை தேவை என்று நேற்றைய விருந்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இல்லாத ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ பிரையன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பினாகி மிஸ்ரா, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் நரேஷ் குஜ்ரால், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

இந்த விருந்தில் தேசிய அரசியலின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைமை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் உமர் அப்துல்லா பேசுகையில், “காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எப்போது காங்கிரஸ் கட்சி வலுவடையும்” எனக் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தெரிவித்த 23 தலைவர்களுக்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் நீங்கள் செய்வதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

காங்கிரஸ் கட்சியில் தலைமையே இல்லை என்றும், தேசிய அளவில் பெரிய கூட்டணியை அமைக்கவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியுள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஒருபுறம் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. மற்றொரு புறம் மத்தியில் இணைந்து செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் தெளிவான தலைமை இல்லை என பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து நாட்டின் நலனுக்காகச் செயல்படத் தயார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகள் பிரச்சினையில் இணைந்து செயல்படத் தயார் என நரேஷ் குஜ்ரால் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்

பாஜகவை எதிர்க்க வலுவான, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி அவசியம் என அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு கபில் சிபலின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பாஜகவை ஓரம் கட்ட பெகாசஸ், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, பணவீக்கம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் தற்போது காங்கிரஸ் தலைமையையே இந்தக் கூட்டம் மூலம் ஓரம்கட்டியுள்ளன.

லாலு பிரசாத் யாதவ்

காங்கிரஸ் கட்சியைக் கட்டி எழுப்ப முயன்றுவரும் ராகுல் காந்திக்கு, கபில் சிபல் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அளித்த விருந்து பெரும் அபாய ஒலியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் கடந்த வாரம் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியாக இருக்கும் கபில் சிபல் அளித்த விருந்தில் பங்கேற்று அந்தக் கட்சியின் தலைமைக்கு எதிராகப் பேசியுள்ளது வேடிக்கை.

ஆனால், கபில் சிபல் விருந்தளித்த இந்த நேரத்தில் ராகுல் காந்தி ஏதும் தெரியாதது போல், ஜம்மு காஷ்மீருக்கு 2 நாள் பயணம் சென்றுவிட்டாராம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x