Published : 08 Aug 2021 03:16 AM
Last Updated : 08 Aug 2021 03:16 AM

அமெரிக்க நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி: ஒரு டோஸ் செலுத்தினாலே போதும்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா என 4 கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் 3 கட்ட பரிசோத னைகளை நடத்தினால் மட்டுமேவெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்த கொள்கையில் மத்திய அரசு அண்மையில் மாற்றம் செய்தது. இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை அங்கீகரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்த நடைமுறையின்படி அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இது ஒரு தவணை தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியை செலுத்திய பிறகு 28 நாட்கள் கழித்து உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும். 85 சதவீதம் வரை பலன் அளிக்கக்கூடியது. இவற்றை உறுதி செய்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மேலும் விரிவடைந்துள்ளது. புதிதாக ஜான்சன்அண்ட் ஜான்சனின் ஒரு தவணைதடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட் டிருக்கிறது. நாட்டில் தற்போது 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் கரோனாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘எங்களது தடுப்பூசிக்கு இந்திய அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கியது. இந்தியாவின் பயாலாஜிக்கல் இ நிறுவனத்தோடு இணைந்து தடுப்பூசிகளை விநியோகம் செய்வோம். எங்களது தடுப்பூசிகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 3 மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்க முடியும். எனவே நீண்ட தொலைவு இடங்களுக்கு தடுப்பூசிகளை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x