Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டுதொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்டவை இப்போதே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பின்னணியில் ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழின் மூத்த நிருபர்கள் நிஸ்துலா ஹெப்பார், வர்கீஸ் கே.ஜார்ஜ், ஒமர் ரஷீத்ஆகியோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...

உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன?

ஒரு காலத்தில் உ.பி.யில் வன்முறை,சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், ஊழல் ஆகியவை புரையோடி போயிருந்தன. பாஜகஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்போது வளர்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ளோம். கடந்த 2014-ல் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. முதல் இரண்டரை ஆண்டுகளில் 44 லட்சம் கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டன. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒன்றரை ஆண்டுகளில் 2.61 கோடி கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தோம். 38 பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு குறைந்திருக்கிறது. பிரதமர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். மின் வசதி இல்லாத 1.24 லட்சம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளோம்.

விகாஸ் துபே உட்பட பலர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது உண்மையா?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற கான்பூர் போலீஸ் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் கொல்லப்பட்டனர். அந்த போலீஸாரின் பிள்ளைகள், அப்பாவை தேட மாட்டார்களா? நீதி என்பது அனைவருக்கும் சமமானது. இதில் சாதி, சமுதாயம் என்ற பாகுபாடு கிடையாது. சட்டத்தை மதித்து நடக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க அரசுநடவடிக்கை எடுக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட சில விவகாரங்களில் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நீதிமன்றங்களே ஏற்றுக் கொண்டுள்ளன.

லவ் ஜிகாத், பொது சொத்தை சேதப்படுத்தினால் சொத்துகள் பறிமுதல் தொடர்பான சட்டங்களை எதிர்த்துநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இவை குறித்து உங்கள் கண்ணோட்டம் என்ன?

நீதிமன்றத்தை நாட அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர்களை நான் தடுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. பொதுச்சொத்தை சேதப்படுத்துவது அடிப்படை உரிமை கிடையாது. அவ்வாறு செய்பவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க, அவர்களின்சொத்துகளை பறிமுதல் செய்ய வகைசெய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

கங்கையில் உடல்கள் மிதந்து சென்றதை பார்த்து உலகமே வேதனையில் ஆழ்ந்ததே?

இந்து மத சம்பிரதாயபடி இறந்தவரின் உடலை புதைக்கின்றனர், எரிக்கின்றனர், நீர்நிலைகளில் விடுகின்றனர். தூய்மை கங்கை திட்டத்தை தொடங்கியது முதல்கங்கையில் உடல்களை மிதக்க விடக்கூடாது என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கரோனா 2-வது அலையின்போது கங்கையில் உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அதை தடுத்துவிட்டோம்.

பலராம்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி,காங்கிரஸோடு தொடர்புடையவர்கள் தங்கள் உறவினரின் உடலை பாலத்தில் இருந்து கங்கையில் வீசினர்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரோனா 2-வது அலையின்போது மருத்துவமனைகளில் பலருக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறதே?

அடிப்படை ஆதாரம் இல்லாமல் எதையும் மிகைப்படுத்தக்கூடாது. கரோனா முதல் அலையின்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது ஊரடங்குக்கு எதிராக பலர் கேள்வி எழுப்பினர். வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை பேருந்துகள் மூலம் பத்திரமாக அழைத்து வந்தோம். அதையும் விமர்சித்தார்கள்.

கரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல்கிடையாது. இது பெருந்தொற்று. கரோனா2-வது அலையின்போது குறுகிய காலத்தில் அதிவேகமாக வைரஸ் பரவியது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் முன்கூட்டியே படுக்கை வசதியை கைப்பற்ற பலர்முயன்றனர். இதன் காரணமாக தேவையுள்ளோருக்கு படுக்கை கிடைப்பதில் பிரச்சினைகள் எழுந்தன. எனினும் மத்திய, மாநில அரசுகள் குறித்த நேரத்தில் செயல்பட்டதால் கரோனாவை எதிர்கொண்டதில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டது.

தேசிய அளவில் பணியாற்ற தலைமை அழைப்பு விடுத்ததா? அதற்காகவா பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து பேசினீர்கள்?

நிச்சயமாக இல்லை. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமரை சந்தித்துப்பேசினேன். இதற்கு முன்பு பிரதமரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். ஆட்சிநிர்வாகம் தொடர்பாக அவரது ஆலோசனைகளை அடிக்கடி கேட்டு பெறுகிறேன்.

மேற்கு உத்தர பிரதேசத்தில் விவசாயிகள், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த கூட்டணியை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

விவசாயிகளுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறு, சிறு விவசாயிகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல உத்தர பிரதேசஅரசும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கடந்த 2007 முதல் 2017 வரை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.95,000 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 4.5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் சங்கத்தின் அரசியல் ரீதியான பிரச்சாரத்துக்கு மக்களிடையே ஆதரவு கிடைக்காது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவின் நிலை என்ன?

இந்த வரைவு மசோதா குறித்து மக்களின் கருத்துகள் கோரப்பட்டு வருகின்றன.

உங்கள் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் மதம் முக்கிய இடம் வகிக்கிறதே? கன்வர் யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றத்தில் கடைசி வரை போராடியது ஏன்?

கன்வர் யாத்திரையை வலுக்கட்டாயமாக நிறுத்தக்கூடாது என்று மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது அனைத்து மாவட்டஆட்சியர்களுடனும் காணொலியில் கலந்துரையாடினேன். அப்போது கன்வர் யாத்திரையை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆட்சியர்களிடம் வலியுறுத்தினேன். கடந்த ஆண்டு எனது யோசனையை ஏற்று கன்வர் சங்கங்கள் யாத்திரையை ரத்து செய்தன.

உங்கள் வாழ்க்கையில் முக்கியமானது மதமா அல்லது அரசியலா?

எனது வாழ்வில் முதன்மையானது இந்து மதம். என்னைப் பொறுத்தவரை வழிபாடு நடத்துவது, பூஜை செய்வது மட்டுமே இந்து மத தர்மம் கிடையாது. நாட்டுக்காக, சமுதாயத்துக்காக சேவையாற்ற வேண்டும். இதுதான் எனது பாதை. எனது மத நம்பிக்கையில் யாரும் குறுக்கிட முடியாது. இதேபோல உங்கள் மத நம்பிக்கையில் குறுக்கிட எனக்கு உரிமை கிடையாது. எனது தர்மத்தின்படி நாட்டுக்காக உயிருள்ளவரை சேவையாற்றி கொண்டிருப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x