Last Updated : 10 Feb, 2016 09:18 AM

 

Published : 10 Feb 2016 09:18 AM
Last Updated : 10 Feb 2016 09:18 AM

மேற்குவங்கத்தில் பரிதாபம்: பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவர் உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சி - இரண்டு பேரை கைது செய்தது போலீஸ்

மேற்குவங்கத்தில் ஆசிரியர் அடித்ததால் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் உள்ள தக் பங்களா மூரில் அல்-இஸ்லாமியா என்ற காப்பக பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவர் ஷமிம் மாலிக் (12), கடந்த திங்கள்கிழமை மாலை வளாகத்துக்கு வெளியே காத்திருந்த பெற்றோரை சந்தித்து விட்டு, அவர்கள் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட் களுடன் மீண்டும் வகுப்புக்கு சென்றுள்ளார்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த பள்ளி தலைமையாசிரியர் ஹலிப் ஷேக்கும், காப்பாளர் லிட்டன் ஷேக்கும், முன் அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்றதற்காக மாணவரை கருணை யில்லாமல் அடித்து துன்புறுத்திய தாகக் கூறப்படுகிறது. இதில் ஷமிம் மாலிக் மயங்கி விழுந்ததால் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷமிம் மாலிக் நேற்று காலை உயிரிழந்தார்.

இதனால் மிகுந்த அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் தலைமையாசிரியர் ஹலிப் ஷேக், காப்பாளர் லிட்டன் ஷேக் இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து உயிரிழந்த மாணவரின் தந்தை ஜுல்ஹாஸ் மாலிக் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தை பள்ளி ஆசிரியர்கள் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். எனது மகனின் உடல்நிலை மோசமடைந்த பிறகே, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கருணையே இல்லாமல் ஆசிரியர் அடித்ததால் தான் என் மகன் உயிரிழந்துள்ளான். எனது மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும்’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x