Last Updated : 10 Feb, 2016 06:47 PM

 

Published : 10 Feb 2016 06:47 PM
Last Updated : 10 Feb 2016 06:47 PM

தேர்தலுக்கு பிறகு சண்டை போட்டு கொள்ளுங்கள்: கேரள காங். தலைவர்களுக்கு ராகுல் அறிவுரை

‘‘சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சண்டை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபடுங்கள்’’ என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை கூறினார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உட்பட சில மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை நீக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கேரள காங்கிரஸ் தலைவர்கள் கூறும் போது, ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைக்க கூடாது என்று கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். எனவே, மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுன் கூட்டணி வைக்க வேண்டாம். அந்தக் கட்சி சந்தர்ப்பவாத கட்சி. வன்முறையை தூண்டிவிடும் கட்சி. தனித்து போட்டியிட்டாலே காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் செல்வாக்கு உள்ளது’’ என்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினர்.

அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கும்போது, “கேரள காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள். மற்ற கட்சியினரை போல இல்லை. ஆனால், உங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் சில மாதங்களுக்கு தள்ளி வைத்து விடுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து சட்டப்பேரவை தேர்தலில் பலமாக போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்” என்றார்.

மார்க்சிஸ்ட்டுன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற கேரள காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கை பற்றி ராகுல் எதுவும் பேசவில்லை.

“காங்கிரஸார் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதற்கு இது நேரம் அல்ல. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள். தேர்தல் முடிந்த பிறகு நீங்கள் சண்டை போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது வேண்டாம். இது ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்” என்றார் ராகுல்.

நிகழ்ச்சியில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன், துணைத் தலைவர் எம்.எம்.ஹாசன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி, முதல்வர் உம்மன் சாண்டி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x