Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 66 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம்: ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் விநியோகிக்க மத்திய அரசு திட்டம்

புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படை யில், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக 66 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இவை வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் மாநிலங்களுக்கு விநி யோகம் செய்யப்படவுள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. முதலில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்ட இந்த தடுப்பூசி, பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதை கடந்தோருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த மே 1-ம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இருந்தபோதிலும், 18 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டதால், மாநிலங்களுக்கு போதிய அளவு தடுப்பூசி கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைக் கருத்தில்கொண்டு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் 50 சதவீத தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 21 முதல் அமலானது.

இந்த புதிய நடைமுறையால், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுக்க தொடங்கியது. இதுவரை இந்தியாவில் 39 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, நடப்பாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கூடுதல் தடுப்பூசிகளை வாங்க முடிவு

இந்நிலையில், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை மேலும் அதி கரிக்கும் வகையில், கூடுதலாக 66 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சீரம் நிறுவனத்திடம் இருந்து 37.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 28.5 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளையும் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் ரூ.205 என்றும், கோவேக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் ரூ.215 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வரிகளுடன் சேர்த்து இவை முறையே ரூ.215.25, ரூ.225.75-ஆக மத்திய அரசுக்கு விற்பனை செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக, இந்த இரண்டு தடுப்பூசிகளையும் டோஸுக்கு ரூ.150 என்ற வீதத்தில் மத்திய அரசு கொள்முதல் செய்து வந்தது. ஆனால், இந்த விலையில் அதிக தடுப்பூசிகளை தயாரிப்பது சாத்தியமாகாது என மருந்து நிறுவனங்கள் தெரிவித்து வந்ததன் பேரில், இந்த புதிய விலை நிர்ணயத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் விநி யோகிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்காக இந் தியா இதுவரை மேற்கொண்ட ஒப்பந்தத்திலேயே, இதுவே மிகப்பெரிய ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் 135 கோடி தடுப்பூசி டோஸ்களை கையிருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத் திய அரசு அண்மையில் தெரிவித்திருந் தது. இந்த சூழலில், 66 கோடி தடுப்பூசி களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுதவிர, மேலும் 30 கோடி தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக பாரத் பயாலாஜிக்கல் - இ நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிடம் 135 கோடி தடுப்பூசிகள் கைவசம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு 42 கோடி தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 41.69 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 41.69 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 2.74 கோடி தடுப்பூசிகள் மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகளின் கைவசம் உள்ளன. மாநிலங்களுக்கு கூடுதலாக 18.16 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x