Published : 16 Jul 2021 01:19 PM
Last Updated : 16 Jul 2021 01:19 PM

கரோனா பாதிப்பு; 6 மாநிலங்களில் 80% - 3-வது அலையை தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி

கடந்த சில நாட்களாக மொத்த கரோனா பாதிப்பில் 6 மாநிலங்களில் மட்டும் 80% பதிவாகியுள்ளன, எனவே கரோனா 3-வது அலை ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளா்.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி வடகிழக்கு மாநிலமுதல்வர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளி்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

நாடுமுழுவதும் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 23,000 கோடி அவசரகால நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த தொகுப்பிலிருந்து வரும் நிதியை பயன்படுத்த வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா பரவல் குறைந்து வருகின்றபோதிலும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக உள்ளது. கடந்த சில நாட்களாக 6 மாநிலங்களில் மட்டும் 80% கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

உருமாற்றம் அடைந்து வரும் கரோனா வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். எனவே இதன் பாதிப்பு 3-வது அலையை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது. கரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்.

உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும். 6 மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும். இதற்கான திட்டமிடல் மிகவும் அவசியம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x