Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

சட்டத்தின் ஆட்சியல்ல, ஆட்சியாளரின் சட்டம்: மேற்கு வங்க வன்முறை குறித்து மனித உரிமை ஆணைய குழு கோபம்

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த மே 2-ம் தேதி வெளியான பிறகு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

மேற்கு வங்கத்தில் பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த இக்குழு தனது அறிக்கையை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த 13-ம் தேதி சமர்ப்பித்தது.

அக்குழு தனது அறிக்கையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை தடுக்கத் தவறிவிட்டதாக மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

50 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தின் நிலைமை சட்டத்தின் ஆட்சி என்பதற்கு பதிலாக ஆட்சியாளரின் சட்டம் என்பதன் வெளிப்பாடாக உள்ளது. வன்முறைப் பரவலும் அதன் கால அளவும், பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலை குறித்து மாநில அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, இடம்பெயர்வு மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

மே 2 முதல் ஜூன் 20 வரை பல்வேறு காவல் நிலையங்களில் 1,934 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் கொலை தொடர்பாக 29, பாலியல் வன்கொடுமை தொடர்பாக 12, கொள்ளை மற்றும் தீவைப்பு தொடர்பாக 940 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இப்புகார்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் 9,304 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் 1,345 பேரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2.8 சதவீதம் மட்டுமே ஆகும். மேலும் கைது செய்யப்பட்ட 1,345 பேரில் 1,086 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கவலைக்குரிய போக்கு தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அரசு இயந்திரத்தின் முழு வலிமையும் ஆளும் கட்சியின் அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்தும் இந்த நோய் மற்ற மாநிலங்களுக்கும் பரவக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

25-ம் தேதி டெல்லி பயணம்

வரும் 2024 மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து தலைநகர் டெல்லியில் அரசியல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா வரும் 25-ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பலரை மம்தா சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x