Last Updated : 05 Feb, 2016 08:54 AM

 

Published : 05 Feb 2016 08:54 AM
Last Updated : 05 Feb 2016 08:54 AM

நிலத்தகராறில் பெண் சுட்டுக் கொலை: திரிணமூல் மூத்த தலைவர் உட்பட 11 பேருக்கு மரண தண்டனை

மேற்குவங்கத்தில் நிலத்தக ராறில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம், நாடிமா மாவட்டம், கிருஷ்ணகன்ஞ் பகுதியில் குன்கிராச்சி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 9 ஏக்கர் விவசாய நிலத்தில் சில குடும்பங்கள் வேளாண்மை செய்து வந்தன.

இந்நிலையில் 9 ஏக்கரையும் நாடியா மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் லங்கேஷ்வர் கோஷ் உரிமை கொண்டாடினார். கடந்த 2014, நவம்பர் 23-ம் தேதி அவரும் அவரது ஆதரவாளர்களும் நிலத்தை அபகரிக்க முயன்றனர்.

அவர்களுக்கு எதிராக நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. அப்போது லங்கேஷ்வர் கோஷ் தரப்பினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அபர்ணா பேக், ஷியாமலி, லத்திகா ஆகிய 3 பெண்களும் ராஜீவ் மண்டல் என்ற மாணவரும் பலத்த காயமடைந்தனர். அபர்ணா பேக்கின் (38) மார்பில் குண்டு துளைத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 11 பேர் கைது செய்யப் பட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

கைதான 11 பேர் மீதான வழக்கு நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி முகோபாத்யாயா நேற்றுமுன்தினம் 11 பேரையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி லங்கேஷ்வர் கோஷ் உட்பட 11 பேருக்கும் நீதிபதி மரண தண்டனை விதித்தார்.

திரிணமூல் மறுப்பு

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை இடது சாரி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் லங்கேஷ்வர் கோஷ் தங்கள் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று திரிணமூல் தலைமை மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x