Last Updated : 19 Feb, 2016 06:42 PM

 

Published : 19 Feb 2016 06:42 PM
Last Updated : 19 Feb 2016 06:42 PM

தகவல் ஆணையர் பதவிக்கான பட்டியலிலிருந்து டெல்லி போலீஸ் ஆணையர் பாஸி பெயர் நீக்கம்

ஜேஎன்யூ பல்கலைக்கழக போராட்ட பிரச்சினையை கையாளத் தவறியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பாஸி பெயர் தலைமை தகவல் ஆணையத்தின் தகவல் ஆணையர் பதவிக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு இந்த பதவிக்கு 3 பேரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. இதில் பாஸி பெயர் இடம்பெறவில்லை.

ஐேஎன்யூ மாணவர் சங்கத்தலைவர் கண்ணய்யா குமார் தொடர்பான வழக்கு பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்தபோது பத்திரிகையாளர்கள், ஆச்ரியர்கள், மாணவர்கள் சில வழக்கறிஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது தடுக்காமல் கைகட்டி நின்றதாக டெல்லி போலீஸார் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிவில் உரிமை அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டின.

இந்த நெருக்குதல் காரணமாக டெல்லி காவல்துறை ஆணையர் பாஸி பெயரை தகவல் ஆணையர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து விலக்குவது என முடிவு எடுக்கப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் ஆணையர் பதவிக்கான காலி இடங்களை நிரப்பிட டெல்லி உயர் நீதிமன்றம் 6 வார அவகாசம் விதித்திருந்தது. கெடு நெருங்கிய நிலையில் நேற்று காலை தேர்வுக்குழு பல்வேறு பெயர்களை பரிசீலித்தது.

பிரதமரின் தெற்கு பிளாக் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

பாஸி பெயர் இந்த பட்டியலில் இருக்கக்கூடாது என ஏற்கெனவே தமது கட்சித் தலைவர்கள் எடுத்திருந்த நிலைப்பாட்டை கார்கே வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

1977-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பாஸி இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளார்.

தகவல் ஆணையர் பதவிக்கான மனுதாரர்களில் இவரும் ஒருவர். அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான தெரிவுக் குழு கடந்த நவம்பரில் இவரது பெயரை பரிந்துரைத்திருந்தது.

மொத்தம் உள்ள 10 இடங்களில் 3 தகவல் ஆணையர்கள் இடம் காலியாக உள்ளது. இந்த 3 இடங்களுக்கும் நேற்று நடந்த கூட்டத்தில் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நியமனம் தொடர்பான இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x