

கெய்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த 172 கோடி டாலர் வரி நிலுவையை வசூலிக்கும் முயற்சியில், பிரான்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திய அரசுக்குச் சொந்தமான 20 சொத்துகளை முடக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாரிஸில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்திய அரசின் குடியிருப்புகள் 2 கோடி யூரோ மதிப்புடையவை. இவை பிரான்ஸில் இந்திய அரசின் பயன்பாட்டுக்காக உள்ளன. இவை முடக்கப்பட்டுள்ளதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே வோடஃபோன் நிறுவனத்துக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான கடந்த காலத்துக்கும் சேர்த்து வரிவிதிக்கும் ரெட்ரோஸ்பெக்டிவ் வரிவிதிப்புதான், கெய்ன்-இந்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினைக்கும் காரணமாகும்.
முன்தேதியிட்ட வரி விதித்தது தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த, இந்திய அரசின் சொத்துகளை முடக்கக் கோரி கடந்த மாதம் 11-ம் தேதி கெய்ன் நிறுவனம் பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்திய அரசின் 20 சொத்துகளை முடக்க வைக்கலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இதுவரை இந்திய அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் உள்ள அதிகாரிகளை வெளியேற்றும் எந்த நடவடிக்கையிலும் கெய்ன் நிறுவனம் ஈடுபடவில்லை.
கெய்ன் நிறுவனம் 1999-ம் ஆண்டில் இந்தியாவில் எண்ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராவா எனுமிடத்தில் எண்ணெய் அகழ்வைக் கண்டுபிடித்து 2002-ம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியது.
2007-ம் ஆண்டு இந்நிறுவனப் பங்குகள் கெய்ன் இந்தியா நிறுவனமாகத் தொடங்கப்பட்டு பங்குச்சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டன. 2006-2007ஆம் ஆண்டு கெய்ன் இந்தியா நிறுவனம் 10 சதவீதப் பங்குகளைத் தாய் நிறுவனமான கெய்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றியது. மூலதனம் மூலம் கிடைத்த ஆதாயத்துக்கு வரி செலுத்துமாறு வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி ரூ.24,500 கோடி தொகையை வரியாகச் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வராத சூழலில் சர்வதேச மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் கெய்ன் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. முதலீட்டு ஆதாயம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இதனால் வேறு வழியின்றி, 2011-ம் ஆண்டு கெய்ன் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது பெரும்பான்மையான பங்குகளை, வர்த்தகத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. கெய்ன் நிறுவனத்தில் 10 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய வருமான வரித்துறை அனுமதிக்கவில்லை. மேலும், கெய்ன் இந்தியாவின் பங்குகளை முடக்கியும், அதன் ஈவுத்தொகையை முடக்கியும் வைத்தனர்.
இந்திய அரசின் செயலை எதிர்த்து, தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் “ 2007-2008ஆம் ஆண்டு பங்கு பரிமாற்றம் செய்தபோது விதிக்கப்படாத மூலதன ஆதாய வரித் தொகையை முன்தேதியிட்டு விதிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் 3 பேர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கியது. மேலும் வரி நிலுவையை வசூலிக்க இந்திய அரசு எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், கேமன் தீவுகளில் உள்ள நீதிமன்றங்களையும் கெய்ன் நாடியது. இந்திய அரசு நிலுவைத் தொகையை திரும்ப அளிக்காவிடில், இந்த 10 நாடுகளில் உள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை கெய்ன் நிறுவனம் முடக்கலாம் என சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் சர்வதேச தீர்ப்பாய உத்தரவைச் சுட்டிக்காட்டி கெய்ன் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.
அவ்வாறு பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் கெய்ன் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில் பாரிஸில் உள்ள மத்திய பகுதியில் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான 20 சொத்துகளை முடக்க கெய்ன் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் விடுத்த அறிக்கையில், “இதுவரை பிரான்ஸ் நீதிமன்றத்தில் இருந்து எந்தவிதமான உத்தரவும் கிடைக்கவில்லை. அந்த உத்தரவு கிடைத்தபின் உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், கெய்ன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரத்தை எவ்வாறு முடிப்பது என்பது இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. இந்திய அரசுடன் சுமுகமாகச் சென்று பிரச்சினையை முடிக்கவே விரும்புகிறேன். இது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பினோம். உலகப் பங்குதாரர்களின் நலன் காக்க நிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.