Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

அதிகரித்து வரும் கட்டாய மதமாற்ற புகாரால் நடவடிக்கை; உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை: வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின

கட்டாய மதமாற்ற புகார் தொடர்பாக உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங் களில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத் தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவ ணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளன.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது அமலில் உள்ளது. திருமணம் செய்வதற் காக பெண்களை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் இந்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி 10 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலங் களைப் பின்பற்றி கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை குஜராத் மாநில அரசும் கொண்டு வர முடிவு செய்தது. இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்டி, குஜராத் மாநிலத் தில் ஒருவரை கட்டாயமாக மதம் மாற் றினாலோ அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குட்பட்ட வராக இருந்தாலோ, தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந் தாலோ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு அமைப்பு இந்த குற்றத்தைப் புரிந் தால், அந்த அமைப்பின் பொறுப்பாள ருக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் குஜராத் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி கடுமையான சட்டங்கள் நாட் டின் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருந்தாலும் அடிக்கடி கட்டாய மத மாற்றம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசத் தில் அடிக்கடி சட்டவிரோதமாக கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து நிதியுதவி பெறப் படுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ) மதமாற்றம் செய் வதற்காக, நிதியுதவி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிக் தாவா மையத்தைச் (ஐடிசி) சேர்ந்த முகமது உமர் கவுதம் மற்றும் அவரது கூட்டாளி ஆலம் காஸ்மி ஆகிய இருவரையும் உ.பி. தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட உமர் கவுதம், ஆலம் காஸ்மி இருவரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000-த்துக் கும் அதிகமானோரை கட்டாயமாக மத மாற்றம் செய்துள்ளனர். இதற்காகவே, டெல்லியின் நொய்டா ஜாமியா நகரில் ‘இஸ்லாமிக் தாவா மையம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குதான், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணம், வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவற்றை காரணமாக வைத்து, ஏராளமானோரை மதம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை பிடிக்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

டெல்லியின் ஜாமியா நகரில் உள்ள ஐடிசி அலுவலகம், உமர் கவுதமின் வீடு, அவரது கூட்டாளி முப்தி காஜி ஜஹாங்கீர் காஸ்மியின் வீடு உட்பட 3 இடங்களில் இந்த சோதனை நடை பெற்றது. இதுபோல, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அல் ஹசன் கல்வி மற்றும் நல அறக்கட்டளை, லக்னோவில் உள்ள கைடன்ஸ் கல்வி மற்றும் சொசைட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:

இஸ்லாமிக் தாவா மையத்தின் முக மது உமர் கவுதமால் நடத்தப்படும் நிறு வனங்கள் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு இடங் களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், வங்கிப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டாய மத மாற்றத்துக்காக இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து கோடிக்கணக்கில் நிதி பெற்றதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடை பெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x